''எந்த மசோதாவையும் நிறுத்தி வைக்க கவர்னருக்கு உரிமை கிடையாது''
எந்த மசோதாவையும் நிறுத்தி வைக்க கவர்னருக்கு உரிமை கிடையாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.
கவர்னருக்கு உரிமை கிடையாது
புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திராவிட மாடல் ஆட்சியை பற்றி கவர்னர் பேசியதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தகுந்த பதிலை அளித்திருக்கிறார். சனாதானம் தான் காலாவதியாகிவிட்டது. திராவிட மாடல் ஆட்சி எழுச்சியோடு இருக்கிறது. கர்நாடகா, மணிப்பூர் உள்பட மற்ற மாநிலங்களில் உள்ள சட்டம்-ஒழுங்கையும், தமிழகத்தில் உள்ள சட்டம்-ஒழுங்கையும் பார்த்தால் நமது நிலைமை பற்றி தெரிந்துவிடும். கவர்னருக்கு எந்தவித மசோதாவையும் நிறுத்தி வைக்கிற உரிமை கிடையாது. எங்களுடைய சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட வேண்டியவை. அதனை வேண்டுமென்றே கவர்னர் காலம் தாழ்த்துகிறார். தமிழக அரசு ஒரு சட்டத்தை இயற்றிய பின், மக்கள் மன்றத்தில் விவாதிக்கப்பட்டு வேறுவிதமான கண்ணோட்டமாக கொண்டு செல்லும் போது நாங்கள் துணிச்சலோடு வாபஸ் வாங்கிக் கொள்கிறோம். இதனால் பின்னடைவு என்பது கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.
பொதுக்கூட்டம்
முன்னதாக நேற்று இரவு புதுக்கோட்டை காமராஜபுரத்தில் நகர தி.மு.க. சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியாக இருப்பதால் தான் பல தொழிற்சாலைகள் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என கவர்னர் பேட்டி கொடுக்கிறார். சட்டமன்றத்தில் கவர்னர் உரையை வாசிப்பதற்கு அவருக்கு தனி உரிமை எதுவும் கிடையாது. அரசு என்ன எழுதிக்கொடுக்கிறதோ? அதனை தான் வாசித்து விட்டு செல்ல வேண்டும். வாசிக்க விருப்பமில்லை என்றால் அன்றைக்கே மறுத்திருக்க வேண்டும்.
வாழ்த்து சொல்லாதது ஒரு குறையா?
தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி பொறுப்பு கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன், `நீங்கள் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் வாழ்த்து சொல்கிறீர்கள்' என கூறுகிறார். அவர் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பற்றி கூறுகிறார். இந்துக்கள் தீபாவளி, விநாயகர் சதுா்த்தி உள்ளிட்ட பண்டிகைகளை கொண்டாடுவார்கள். என்னுடைய பிறந்த நாளுக்கு நான் வாழ்த்து சொல்வேனா?. அதைப்போல தான் என்னுடைய கருத்து, தமிழக முதல்-அமைச்சர் இந்து மதத்தை சேர்ந்தவர்களுக்கு வாழ்த்து சொல்வது என்பது தனக்கு தானே வாழ்த்து சொல்லிக்கொள்வதை போல, எனவே மற்ற மதத்தை சேர்ந்தவர்கள் நமது சகோதரர்கள், எனவே அதற்காக அவர்களுக்கு வாழ்த்து சொல்கிறார். மற்ற மதத்தை சேர்ந்தவர்களுக்கு வாழ்த்து சொல்வதில் என்ன தப்பு இருக்கிறது. வாழ்த்து சொல்லாதது ஒரு குறையா?. இந்த ஆட்சியில் வேறு எந்த குறையையும் கண்டுபிடிக்க முடியாதவர்கள். சிறு, சிறு குற்றங்களை பூதக்கண்ணாடி வைத்து பெரிதாக்க நினைக்கிறார்கள். ஆனால் அவர்களது கனவு தகர்த்தெறியப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.