நாங்கள் வரமாட்டோம் என்றதும் தேநீர் விருந்தை கவர்னர் ஒத்திவைத்துள்ளார் -கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
நாங்கள் வரமாட்டோம் என்றதும் தேநீர் விருந்தை கவர்னர் ஒத்திவைத்துள்ளார் கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு.
சென்னை,
சுதந்திர தினவிழாவையொட்டி, சத்தியமூர்த்தி பவனில் தேசிய கொடியேற்றி வைத்த பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-
தற்போது நாடு ஒரு சிரமமான சூழ்நிலையை சந்தித்து வருகிறது. மணிப்பூர் மாநிலத்திற்கு சென்று பிரதமர் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கவில்லை.
நீட் தேர்வு குறித்து கவர்னர் வரம்பு மீறி கருத்து தெரிவித்து உள்ளார். சட்டமன்றம் ஒரு தீர்மானத்தை அனைத்து கட்சிகளின் ஒப்புதல் பெற்று முழுமையாக நிறைவேற்றி ஒரு முறைக்கு பதிலாக 2 முறை அனுப்பியும் கவர்னர் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்று சொல்வதற்கு அதிகாரம் இல்லை.
கவர்னரின் பேச்சும், செயலும் தவறானது. எங்கள் கூட்டணி கட்சிகள் அனைவரும் அவரது தேநீர் விருந்துக்கு வரமாட்டோம் என்று கூறியதும், மழையே பெய்யாத போதும் மழையின் காரணமாக தேநீர் விருந்தை ஒத்தி வைப்பதாக கூறியிருக்கிறார். அண்ணாமலைக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் தேநீர் கொடுப்பதில் அவருக்கே சந்தோசம் இல்லை.
இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.