கவர்னர் விவகாரம்: தமிழக மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் - மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் எச்சரிக்கை


கவர்னர் விவகாரம்: தமிழக மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் - மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் எச்சரிக்கை
x

கோப்புப்படம்

தினத்தந்தி 3 July 2023 8:23 AM IST (Updated: 3 July 2023 9:45 AM IST)
t-max-icont-min-icon

கவர்னர் ரவிக்கு கடிவாளம் போடாவிட்டால் தமிழக மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் - மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

கவர்னர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்து ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழ்நாடு மக்களின் நலனுடன் கவர்னர் ஆர்.என்.ரவி விளையாடுகிறார். கவர்னர் தேவை இல்லை என்பதே எங்களின் நிலைப்பாடு. கவர்னர் ஆர்.என்.ரவிக்கு மத்திய அரசு கடிவாளம் போடாவிட்டால், தமிழ்நாடு மக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்.

மாநிலத்திற்கு கவர்னர் பதவி தேவையற்றது; தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்வதை பொறுத்துக் கொள்ள முடியாமல் கவர்னர் விமர்சனம் செய்து வருகிறார் தமிழகத்தில் முதலீடு செய்யவிடாமல் தடுக்கவே வெளிநாடு செல்வதால் முதலீடு வராது என கூறுகிறார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியை தன்னிச்சையாக பதவி நீக்கம் செய்தது, பாஜகவைபோல் அவர் செயல்படுவதையே காட்டுகிறது; அமலாக்கத்துறையை தனது கிளை அலுவலகம்போல பாஜக மாற்றியுள்ளதால், தனது முடிவு சரியானது என அவர் கூறியுள்ளார்.

மாநில அரசு நிர்வாகம் சுமூகமாக செயல்படுவதை அனுமதிக்கக்கூடாது என செயல்படுகிறார்; தமிழ்நாடு அரசின் மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளை கவர்னரால் ஜீரணிக்க முடியவில்லை. எதிர்க்கட்சிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது; பாஜகவினர் மீதும் வழக்குகள் உள்ளன.

அமலாக்கத்துறை நடவடிக்கையால் பாஜக மீதான தனது நிலைப்பாட்டை திமுக மாற்றிக் கொள்ளாது. மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் மூலம் திமுக அமைச்சர்களை குறிவைத்து பாஜக செயல்படுகிறது. தேசிய முன்னணியை உருவாக்க முயற்சிப்பதால், இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story