பூலித்தேவன் சிலைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி மாலை அணிவித்தார்
வாசுதேவநல்லூர் அருகே சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவன் சிலைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி மாலை அணிவித்தார். மேலும் ஒண்டிவீரன், வெண்ணி காலாடிக்கும் மரியாதை செலுத்தினார்.
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் அருகே சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவன் சிலைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி மாலை அணிவித்தார். மேலும் ஒண்டிவீரன், வெண்ணி காலாடிக்கும் மரியாதை செலுத்தினார்.
பூலித்தேவன் சிலைக்கு மரியாதை
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்தார். அவர் நேற்று காலை வாசுதேவநல்லூர் அருகே உள்ள நெற்கட்டும்செவலுக்கு சென்றார். அவருக்கு மாமன்னர் பூலித்தேவனின் வாரிசான கோமதி முத்துராணித்துரைச்சி சார்பாக அவரது கணவர் பாண்டியராஜா, மகன்கள் சிபி உள்ளமுடையார் துரை, சிவகுமாரசாமி ராஜா ஆகியோரும், நெற்கட்டும்செவல் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியராஜா, மாமன்னர் பூலித்தேவர் மக்கள் இயக்க தலைவர் பூசைத்துரை மற்றும் ஊர் பொதுமக்களும் பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்றனர். மேலும் பூலித்தேவன் வாரிசு சார்பில் கவர்னருக்கு வேல் வழங்கப்பட்டது.
பின்னர் அவர் அங்குள்ள மாமன்னர் பூலித்தேவனின் முழுஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் பூலித்தேவன் நினைவு மாளிகையை முழுவதும் சுற்றி பார்த்து, பார்வையாளர்கள் பதிவேட்டில் கையெழுத்திட்டார். நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன், சங்கரன்கோவில் உதவி கலெக்டர் சுப்புலட்சுமி, சிவகிரி தாசில்தார் ஆனந்த், சுப்பிரமணியபுரம் பஞ்சாயத்து தலைவர் வக்கீல் ராம்குமார், மண்டல தாசில்தார் வெங்கடசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வெண்ணி காலாடிக்கு மரியாதை
இதைத்தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி நெற்கட்டும்செவல் அருகே உள்ள பச்சேரி கிராமத்துக்கு சென்றார். அவருக்கு கிராம மக்கள் செண்டை மேளம் முழங்க, மாலை அணிவித்து பூக்கள் தூவி வரவேற்றனர். பின்னர் அவர் மாமன்னர் பூலித்தேவனின் படைத்தளபதியான வெண்ணி காலாடி உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது அவருக்கு பா.ஜனதா வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில துணைத்தலைவர் அ.ஆனந்தன் ஏர் கலப்பை நினைவுப்பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் வெண்ணி காலாடி வம்சாவளியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
வீரவாள் நினைவுப்பரிசு
பின்னர் கவர்னர் ஆர்.என்.ரவி பச்சேரி கிராமத்துக்கு கீழ்ப்புறம் உள்ள மற்றொரு படைத்தளபதியான ஒண்டிவீரனின் நினைவிடத்துக்கு சென்றார். அவருக்கு ஒண்டிவீரன் வாரிசு ஆறுமுகம் மற்றும் கிராம பொதுமக்கள் சார்பில் மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து ஒண்டிவீரனின் நினைவு தூணுக்கு அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஒண்டிவீரன் வாரிசு சார்பாக கவர்னருக்கு வீரவாள் மற்றும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.