வரம்புகளை மீறி அரசியல்வாதி போல தமிழக கவா்னர் செயல்படுகிறார் -கே.பாலகிருஷ்ணன் பேட்டி
வரம்புகளை மீறி அரசியல்வாதி போல தமிழக கவா்னர் செயல்படுகிறார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
தஞ்சாவூர்,
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தொடர்ந்து சர்ச்சையை கிளம்பும் வகையில் பேசி வருகிறாா். அவர் பல உண்மைகளுக்கு மாறான செய்திகளை வெளியிட்டுள்ளார். கவர்னர் சட்ட வரம்புகளுக்கு உட்பட்டு தான் செயல்பட முடியும். ஆனால் நமது கவர்னர் அந்த வரம்புகளை மீறி, ஒரு அரசியல்வாதியை போல செயல்படுகிறார்.
இவ்வளவு காலம் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லாத கவர்னர், இப்போது பதில் சொல்கிறார். கவர்னர் உரை என்பது அவர்கள் எழுதிக் கொடுப்பதை எல்லாம் படிக்க முடியாது. அதில் பல பொய்யை எழுதியுள்ளனர். அதையெல்லாம் நான் படிக்க முடியாது என கவர்னர் கூறியுள்ளார்.
கிடப்பில் 17 மசோதாக்கள்
ஆனால், அமைச்சரவையின் கூட்டு முடிவின்படி எழுதி கொடுக்கப்பட்ட உரையைத்தான் கவர்னர் படிக்க வேண்டும் என சட்டம் கூறுகிறது. அந்த உரையை மாற்றுவதற்கோ, திருத்துவதற்கோ, படிக்க மறுப்பதற்கோ உரிமையில்லை.
தன்னிடம் எந்த விதமான மசோதாக்களும் நிலுவையில் இல்லை என கவர்னர் கூறியிருக்கிறார். ஆனால் 17 மசோதாக்கள் கிடப்பில் ஒப்புதல் இல்லாமல் காத்துக் கிடக்கின்றன என தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருக்கிறார்.
கடிதம்
அரசின் மீது பிரச்சினை இருந்தால், அமைச்சர்களுடன், முதல்-அமைச்சருடன் நேரடியாகவோ, கடிதம் மூலமாகவோ தெரிவிக்கலாம். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது. இது தொடர்பாக விரைவில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் கலந்து பேசி கவர்னரை தமிழகத்தில் இருந்து வெளியேற்றுவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவு எடுப்போம்.
கவர்னர் இவ்வாறு பேசுவதற்கு மத்திய பா.ஜ.க. அரசு தான் காரணம். கவர்னரை பற்றி பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் பல முறை புகார்கள் செய்தும், கவர்னரை அவர்கள் கட்டுப்படுத்த மறுக்கின்றனர். பா.ஜ.க. இல்லாத மாநிலங்களில் கவர்னரை பயன்படுத்துவதை போல், தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு தலைவலி கொடுப்பதற்கு கவர்னரை பயன்படுத்துகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.