கவர்னர் ஆர்.என். ரவியை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்
தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் கவர்னர் ஆர்.என். ரவியை திரும்பப் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெய்வேலியில் நடந்த தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நெய்வேலி,
தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நெய்வேலி என்.எல்.சி. ஆர்ச் கேட் எதிரே உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ.தலைமை தாங்கினார். தொழிற்சங்க மாநில பொதுச்செயலாளர் ஜம்புலிங்கம், தலைமை நிலைய செயலாளர் உ.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தமிழ்நாட்டில் தொழில், வணிகம், வேலை ஆகியவை தமிழர்களுக்கே என்பதை உறுதி செய்ய அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும், தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 90 சதவீதம் வேலைவாய்ப்பு மற்றும் தமிழ்நாடு அரசின் அனைத்து துறை வேலைவாய்ப்புகளில் 100 சதவீதம் தமிழ்நாடு மக்களுக்கே வழங்க உடனடியாக அவசர சட்டம் இயற்ற வேண்டும்,
தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் கவர்னர் ஆர்.என். ரவியை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும், காவிரிஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹெல்தரை பதவி நீக்கம் செய்ய ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
ஆன்லைன் சூதாட்டம்
மேலும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய உடனடியாக சட்டம் கொண்டு வரவேண்டும், காவல்நிலைய மரணங்கள் குறித்து விசாரிக்க தனி காவல் பிரிவு அமைத்திட வேண்டும், சாதி ஆணவக்கொலைகளை தடுக்கும் வகையில் காவல்துறையில் ஒரு தனி பிரிவை ஏற்படுத்த வேண்டும், நளினி, ரவிச்சந்திரன், சாந்தன் உள்ளிட்ட ஆறு பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், கொரோனா காலத்தில் இறந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு நிபந்தனையின்றி கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க வேண்டும்,
சிதம்பரம் நடராஜர் கோவிலை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள் மற்றும் அனைத்து துறைகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்வதை உறுதிப்படுத்த வேண்டும், சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகத்தை முறைப்படி ஆராய்ந்து மோசடியில் ஈடுபட்ட தீட்சிதர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கஇதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.