சென்னையில் பல்கலைக்கழக உறுப்பினர்களுடன் கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு; கல்வித்தரம், நிர்வாகத்தை மேம்படுத்த ஆலோசனை


சென்னையில் பல்கலைக்கழக உறுப்பினர்களுடன் கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு; கல்வித்தரம், நிர்வாகத்தை மேம்படுத்த ஆலோசனை
x
தினத்தந்தி 5 July 2023 2:30 AM IST (Updated: 5 July 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

மாநில பல்கலைக்கழகங்களின் உறுப்பினர்களுடன் கவர்னரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி சந்தித்து பேசினார். அப்போது கல்வித்தரம், நிர்வாகத்தை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

கல்வித்தரம்

பல்கலைக்கழகங்களின் கல்வித்தரம் மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்துவது குறித்து பல்கலைக்கழகங்களின் சிண்டிகேட், செனட், நிர்வாகக்குழு உறுப்பினர்கள், வேந்தரால் பரிந்துரைக்கப்பட்டவர்களை, பல்கலைக்கழகங்களின் வேந்தரும், கவர்னருமான ஆர்.என்.ரவி சென்னை கிண்டி ராஜ்பவன் மாளிகையில் நேற்று சந்தித்தார்.

அப்போது பல்கலைக்கழகங்களின் கல்வித்தரம், நிர்வாகத்தை மேம்படுத்துவது குறித்து உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகளையும், அவர்கள் கூறிய யோசனைகளையும் கவர்னர் ஆர்.என்.ரவி கேட்டறிந்தார். மேலும், உறுப்பினர்கள் பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி நிலை சீராக இல்லை என்றும், அது குறைந்து வருகிறது என்றும் கவலையோடு தெரிவித்ததாகவும், காலத்தின் தேவை மற்றும் தேவைகளுக்கு ஏற்ப பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் மற்றும் கற்றல் முறைகளை கொண்டு வர உறுப்பினர்கள் பரிந்துரைத்ததாகவும், காலதாமதம் இன்றி யு.ஜி.சி. விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியதாகவும் கவர்னர் மாளிகை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுபவங்கள், கருத்துகள்...

மேலும் அந்த செய்திக்குறிப்பில் கவர்னரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி, உறுப்பினர்களுக்கு வழங்கிய அறிவுறுத்தல்கள், ஆலோசனைகள் விவரம் வருமாறு:-

சிண்டிகேட், செனட் மற்றும் நிர்வாகக் குழு கூட்டங்கள் பல்கலைக்கழக வளாகத்துக்குள் அவ்வப்போது நடத்தப்பட வேண்டும். இந்த குழுக்களின் உறுப்பினர்கள் தங்களுடைய கருத்துகளையும், அனுபவங்களையும் சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் பகிர வேண்டும். மாநில அரசின் சம்பந்தப்பட்ட செயலாளர் இல்லாத காரணத்தால், இந்த குழுக்கள் அடிக்கடி சந்திக்க முடிவதில்லை. பல நேரங்களில் இது போன்ற கூட்டங்கள், தலைமை செயலகத்தில் நடக்கிறது.

பெரும்பாலான மாநில பல்கலைக்கழகங்களில் வழக்கமான பதிவாளர்கள், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்கள் இல்லாமல் இருக்கின்றன. அந்த பணியிடங்களுக்கு தற்காலிக பொறுப்பாளர்கள்தான் நியமிக்கப்படுகின்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த துணைவேந்தர்கள் கூட்டத்தில் பல்கலைக்கழக சட்டங்களின்படி பணியிடங்களை தாமதம் இன்றி நியமிப்பதற்கான செயல்முறையை தொடங்க அறிவுறுத்தப்பட்டன.

யு.ஜி.சி. விதிமுறைகள்

சில பல்கலைக்கழங்களின் துணைவேந்தர்கள் இல்லாமல் இருப்பதால், அதன் செயல்பாடு பாதிக்கப்பட்டு இருக்கிறது. துணைவேந்தர் தேர்வு செயல் முறை பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) விதிமுறைகளுடன் இருக்க வேண்டும்.

பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு சிறந்த வேலைவாய்ப்புகளை உறுதி செய்வதற்காக தொழில் முனைவோர் பற்றிய நடைமுறை நுண்ணறிவுகளுடன் அனுபவம் வாய்ந்த பேராசிரியர்களை ஈடுபடுத்தி மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story