'தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை கவர்னர் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்' அமைச்சர் எஸ்.ரகுபதி அறிக்கை


தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை கவர்னர் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் அமைச்சர் எஸ்.ரகுபதி அறிக்கை
x

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்க கவர்னர் ஆர்.என்.ரவி கற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.

சென்னை,

'அரசியல் சட்டத்துக்கு மட்டுமே விசுவாசமாக இருக்க வேண்டும்' என்ற அடிப்படையை மறந்துவிட்டு கவர்னர் ஆர்.என்.ரவி தனது விருப்பு வெறுப்புகளுக்காகவும், தான் சார்ந்த அரசியல் சிந்தனைகளுக்காகவும் தமிழ்நாட்டு மக்களின் நலனையும், தமிழ்நாடு சட்டமன்றத்தின் இறையாண்மையையும் தொடர்ந்து கொச்சைப்படுத்தி கொண்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-அமைச்சரை காட்டிலும் தான் மேலானவர் என்ற நினைப்பில் கவர்னர் செயல்படக்கூடாது.

முதல்-அமைச்சருக்கு மேல் அதிகாரம் உள்ளவர் என்ற கற்பனை குதிரையில் கவர்னர் பவனிவருவது மக்களாட்சி கருத்தியலை மாசுபடுத்துகிறது.

தீர்ப்பை படித்து பார்க்கவில்லை

மாநில அரசின் நிர்வாக அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடமும், அந்த அரசின் அமைச்சரவையிடமும் இருக்கிறது. அந்த அமைச்சரவைதான் சட்டமன்றத்துக்கு பதில் சொல்ல கடமைப்பட்டது. ஆகவேதான், அமைச்சரவை ஆலோசனையின்படி கவர்னர் செயல்பட வேண்டும் என பல்வேறு வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு கூறியிருக்கிறது.

சட்ட மேதாவித்தனத்தில் தன்னை விட்டால் வேறு யாரும் இல்லை என்ற நினைப்பில் இருக்கும் கவர்னர் அந்த தீர்ப்பை படித்து பார்க்கவில்லை என்றே தோன்றுகிறது.

இப்படிப்பட்ட கவர்னர்களிடம் சட்டமன்ற இறையாண்மை சிக்கித் தவிக்கும் சூழலைத் தவிர்க்கவே சர்க்காரியா கமிஷன் தனது பரிந்துரையில் அரசியல் சட்டப்பிரிவு 200-ன்படி கவர்னரின் ஒப்புதலுக்காக மசோதாக்களை அனுப்பிவைக்கும்போது, அந்த பிரிவில் உள்ள நிறுத்திவைக்கும் என்ற வாசகம் அறவே நீக்கப்பட வேண்டும் என தெளிவாக பரிந்துரைத்துள்ளது.

உணர வேண்டும்

கவர்னர், தனது ஒப்புதலுக்கு வந்த ஒரு மசோதா மீது ஏதாவது கருத்துகேட்க நினைத்தால் அதை ஒரு மாதத்துக்குள் செய்ய வேண்டும் என கால நிர்ணயம் உள்ளது. அரசியல் ஆர்வத்தில் திளைத்து, மதவாத அரசியலுக்கு மாலை சூடுகின்ற நினைப்பில் மிதக்கும் கவர்னர் அரசியல் சட்டத்தையும் பார்ப்பதில்லை, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளையும் அறிந்துகொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. ஒன்றிய-மாநில அரசு உறவுகள் குறித்து பரிந்துரை கொடுத்துள்ள சர்க்காரியா கமிஷன் அறிக்கைகளைக்கூட படித்து பார்க்க விரும்புவதில்லை.

எல்லாவற்றுக்கும் மேல் மத்திய, மாநில அரசுக்கு ஒரு ஏஜென்ட் என்பதையும் மறந்து, ஏதோ முதல்-அமைச்சருக்கும் மேலானவர் போன்று, தான் தமிழ்நாடு சட்டமன்றத்துக்கும், அதன் இறையாண்மைக்கும் கட்டுப்பட்டவரல்ல என்ற தொனியிலும் முதல்-அமைச்சர் பதிலளித்த பிறகும் ராஜ்பவன் டுவிட்டர் கணக்கை அரசுக்கு எதிரான பரப்புரைக்கு பயன்படுத்துவது மரபுகளுக்கும், தாம் வகிக்கும் பதவியின் மாண்புக்கும் எதிரான செயல் என்பதை கவர்னர் உணர வேண்டும்.

சட்டமன்ற இறையாண்மை

அருணாசலபிரதேச சட்டமன்ற வழக்கில், கவர்னரின் செயல்பாடுகளை சுப்ரீம் கோர்ட்டு அரசியல்சாசன அமர்வு வரையறுத்துள்ளது. பேரறிவாளன் வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் தீர்ப்புகள், அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டே கவர்னர் நடக்க வேண்டும் என கூறுகின்றன.

ஆனாலும், எதையாவது பேசி இந்த பதவியைவிட கூடுதலாக இன்னொரு பதவிக்கு சென்றுவிட வேண்டும் என்ற பதவிவெறியில், அரசியல் சட்டத்தின் அடிப்படையிலான தீர்ப்புகள் எல்லாம் கவர்னரின் கண்ணுக்கு தெரியவில்லை.

சர்க்காரியா கமிஷன் கவர்னர் பதவிக்கு பரிந்துரைத்த தகுதிகள் முறையாக கடைப்பிடிக்கப்பட்டிருந்தால், தமிழ்நாடு சட்டமன்றத்தின் இறையாண்மை-தமிழ்நாட்டு மக்களின் நலன் என்ற பூமாலை கவர்னர் ஆர்.என்.ரவியின் கையில் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டிருக்காது என்ற ஆதங்கம் என் போன்றோருக்கு மட்டுமல்ல, நல்லதொரு நாடாளுமன்ற ஜனநாயகத்தை விரும்பும் ஒவ்வொரு குடிமகனுக்கும் இன்றைக்கு வந்துள்ளது என்றால், அதற்கு முழுப்பொறுப்பு கவர்னர் ரவியும், பொதுவெளியில் அவரது அரசியல் செயல்பாடுகளும்தான்.

மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்

அரசியல்சட்டத்தை பாதுகாப்பேன் என உறுதிமொழி ஏற்றுக்கொண்ட கவர்னர், அந்த அரசியல்சட்டத்தின் மீதே நம்பிக்கையின்றி செயல்படுவது ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கும் நல்லதல்ல, அவர் வகிக்கும் பதவிக்கும் ஏற்றதல்ல.

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும், தமிழ்நாடு சட்டமன்றத்தின் இறையாண்மையையும் மதிக்க கவர்னர் ஆர்.என்.ரவி கற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story