நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும்; திருச்சியில் முத்தரசன் பேட்டி


நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும்; திருச்சியில் முத்தரசன் பேட்டி
x

நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று திருச்சியில் முத்தரசன் கூறினார்.

திருச்சி

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், திருச்சியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மருத்துவ காப்பீடு திட்ட பணியாளர்கள் குறைந்த ஊதியத்திற்கு பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்து, நிறைவேற்ற வேண்டும். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வகிப்பது உயரிய பொறுப்பு. அந்த பொறுப்பிற்குரிய முறையில் செயல்படவில்லை. அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிரதிநிதியாக, பா.ஜ.க.வின் மிகச்சிறந்த தொண்டராக செயல்படுகிறார். அவர் கவர்னர் பொறுப்பில் இருந்து கொண்டு, சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறுவது தவறானது. சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்தான் நீட் தேர்வு விலக்கு மசோதா. இது ஒரு கட்சி சார்ந்த பிரச்சினை அல்ல என்பதை கவர்னர் புரிந்து கொள்ள வேண்டும். தி.மு.க. கொடுத்ததாலேயே அவர் நிராகரிக்கிறாரா? என்று தெரியவில்லை. இது ஒரு பொதுவான கோரிக்கை என்பதால் நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கவர்னர் முன் வர வேண்டும். நாங்குநேரியில் நடந்த சம்பவம் கடுமையான கண்டனத்திற்குரியது. அந்த விவகாரத்தில் அரசு உடனடியாக தலையிட்டு அந்த குடும்பத்திற்கு உதவி செய்திருக்கிறது. அந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story