கல்வியில் அரசியலை புகுத்த கவர்னர் முயற்சிக்கிறார்
கல்வியில் அரசியலை புகுத்த கவர்னர் முயற்சிக்கிறார் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றம்சாட்டியுள்ளார்
விழுப்புரம்
ஆளுங்கட்சிக்கு எதிராக
விழுப்புரத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் உயர்கல்வியை பெரிதாக வளர்த்தெடுக்க வேண்டுமென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எங்களையெல்லாம் அழைத்து தினம், தினம் பேசி மாணவர்களுக்காக பல திட்டங்களை தீட்டி வருகிறார்.
இதெல்லாம் தெரியாமல் கவர்னர், ஊட்டியில் துணைவேந்தர்களை அழைத்து அரசியல் செய்கிறார். அவர் கவர்னர் வேலையை பார்க்காமல் தமிழ்நாட்டில் ஆளுங்கட்சிக்கு எதிராக செயல்படும் எதிர்க்கட்சிபோல் நடந்துகொள்கிறார். அவர் பேசுவது மிகவும் வருந்தத்தக்கது.
மகிழ்ச்சி அளிக்கிறது
தமிழ்நாடு, உயர்கல்வித்துறையில் மிகுந்த வளர்ச்சியை எட்டியுள்ளது. 2021-ல் ஆய்வுப்படிப்புகளில் 32-வது இடத்தில் இருந்தது, தற்போது 2023-ம் ஆண்டில் 13-வது இடத்தை எட்டியுள்ளது என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
என்ஜினீயரிங்கில் 2021-ம் ஆண்டு 18-வது இடத்தில் இருந்த அண்ணா பல்கலைக்கழகம் தற்போது 13-வது இடத்தை எட்டிப்பிடித்துள்ளது என்பது கூடுதல் மகிழ்ச்சியளிக்கிறது.
இதேபோல் பல்கலைக்கழகங்கள் பட்டியலில் 2021-ம் ஆண்டு 16-வது இடத்தில் இருந்து தற்போது 14-வது இடத்தை எட்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஓவர் ஆல் ரேங்கில் 25-வது இடத்திலிருந்து தற்போது 18-வது இடத்திற்கு வந்துள்ளது.
இதெல்லாம் தெரியாமல் கவர்னர், தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சி பின்தங்கியுள்ளது என்று கூறுவது முற்றிலும் தவறான கருத்து.
பா.ஜ.க.வை திணிக்க திட்டம்
கல்வியில் அரசியல் நடத்த வேண்டும் என நாங்கள் விரும்பவில்லை, ஆனால் அரசியலை புகுத்த வேண்டும் என கவர்னர் விரும்புகிறார், அதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். தமிழ்நாட்டில் ஒரே மாதிரியான கல்விமுறை இருக்க வேண்டும். அனைத்து பாடங்களிலும் தரம் உயர்த்தப்பட வேண்டும்.
அண்ணா, கருணாநிதி ஆகியோரின் வழியில் தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைத்து பாடங்களையும் தமிழ்வழியில் கற்க வேண்டும் என முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை ஏற்றுக்கொள்ள யாரும் தயாராக இல்லை. அதனால் கவர்னர் மூலமாக பா.ஜ.க.வை திணிக்கலாம் என திட்டம் தீட்டி வருகிறார்கள். அது தமிழ்நாட்டில் பலிக்காது. எனவே கவர்னர், தமிழ்நாட்டில் அரசியல் செய்வதை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.