மீனவர்களுக்காக பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி கொண்டு வருவார்


மீனவர்களுக்காக பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி கொண்டு வருவார்
x
தினத்தந்தி 18 April 2023 6:45 PM GMT (Updated: 18 April 2023 6:47 PM GMT)

மீனவர்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி இன்னும் பல்வேறு திட்டங்களை கொண்டு வர உள்ளார் என தேவிபட்டினத்தில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என். ரவி பேசினார்.

ராமநாதபுரம்

தேவிபட்டினம்,

மீனவர்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி இன்னும் பல்வேறு திட்டங்களை கொண்டு வர உள்ளார் என தேவிபட்டினத்தில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என். ரவி பேசினார்.

கலந்துரையாடல் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் நவபாஷன கோவிலில் தரிசனம் செய்வதற்காக நேற்று மாலை தமிழக கவர்னர் ஆர்.என். ரவி வருகை தந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் நவபாஷன கோவிலில் கடலில் இறங்கி நின்று சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடித்த பின்னர் கடலடைத்த பெருமாள் கோவிலுக்கு வந்த அவருக்கு தேவஸ்தானம் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை வரவேற்பு கொடுக்கப்பட்டது.

அங்கு வாசலில் நின்று தரிசனம் செய்த கவர்னர் அருகில் இருந்த மண்டபத்தில் மீனவர்களுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். கவர்னரிடம் மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கோரிக்கை மனுக்களையும் கொடுத்தனர்.

பல்வேறு திட்டங்கள்

மீனவர்கள் மத்தியில் கவர்னர் ஆர்.என். ரவி பேசியதாவது:- மீனவர்களாகிய உங்களது பங்களிப்பு நாட்டிற்கு மிக முக்கியமான ஒன்று. சுனாமி, புயல், இயற்கை பேரிடர் போன்ற பல்வேறு சீற்றங்களையும் தாண்டி மிகவும் கஷ்டப்பட்டு கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகிறீர்கள். பிரதமரை சந்தித்து பேசும்போது மீனவர்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும், கஷ்டங்கள் குறித்தும் பேசி உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மீனவர்களுக்காக இன்னும் பல்வேறு திட்டங்களை கொண்டு வர உள்ளார். ராஜ் பவனில் பொங்கல் விழா, சுதந்திர தின விழா, குடியரசு தின விழா போன்ற விழா நடைபெறும் போது மீனவர்கள் அனைவரும் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


Next Story