கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம்


கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில்  சட்ட விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 5 Nov 2022 12:15 AM IST (Updated: 5 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கோவிந்தம் மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் மகளிர் கூட்டமைப்பு மன்றம் மற்றும் ராக்கிங் எதிர்ப்பு மன்றம் சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பொ.ஜெயந்தி தலைமை தாங்கினார். வணிக நிர்வாகவியல் துறை பேராசிரியை வா.பார்கவி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாவட்ட கோர்ட்டு வக்கீல் சா.சொர்ணலதா கலந்துகொண்டு, 'பாலினச்சமநிலை மற்றும் பெண் உரிமை' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மேலும் அவர் பேசுகையில், பெண்களுக்கான உரிமைகள், சட்டங்களை முழுமையாக தெரிந்து கொண்டு மாணவிகள் சமுதாயத்தில் உயர்நிலைக்கு வரவேண்டும்' என்றார். பின்னர் மாணவிகள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் சட்டவிளக்கங்களை அளித்தார். 3-ம் ஆண்டு பொருளியல் துறை மாணவி த.விஜயபாரதி நன்றி கூறினார். கூட்ட ஏற்பாடுகளை மகளிர் மன்ற ஒருங்கிணைப்பாளர் சண்முகவல்லி, ராக்கிங் எதிர்ப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வி, குமுதா, பேராசிரியைகள் ஷீலாஜெபஸ்டா, கவிதா ராமலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர். கூட்ட நிகழ்ச்சியை கணிதவியல் துறை மாணவி சுஜித்தா, வேதியியல் துறை மாணவி அஜிநேசா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

மேலும், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் தொழில் முனைவு குறித்து விழிப்புணர்வு கூட்டம் மற்றும் புதிய பொருட்கள் அறிமுகப்படுத்துதல் போட்டி நடைபெற்றது. வணிகநிர்வாகவியல்துறை மேலாண்மை மன்றமும், தொழில்முனைவு மற்றும் புதுமையாக்கம் கூட்டமைப்பு சார்பாக மாணவிகளுக்கு தொழில்முனைவு குறித்து நடைபெற்ற கூட்டத்திற்கு கல்லூரி முதல்வர் பொ.ஜெயந்தி தலைமை தாங்கினார். துறைத்தலைவர் த.ரேணுகா முன்னிலை வகித்தார். மாணவி நர்மதா வரவேற்றார். 3-ம் ஆண்டு மாணவிகளான சரண்யா, ரத்னராதிகா ஆகியோர் மாணவ பருவத்திலேயே சுயசார்போடு பகுதிநேர சுயதொழில் செய்வது குறித்தும், அதற்கான வாய்ப்புகள், வழிகள் குறித்தும் தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். பின்னர் துறை மாணவிகளின் புதிய பொருட்கள் அறிமுகப்படுத்துதல் போட்டி நடைபெற்றது. போட்டியில் 9 அணிகள் பங்குபெற்றன. இதில் 3-ம் ஆண்டு மாணவிகள் ஐஸ்வர்யா, இனிய ரஞ்சனி அணி முதலிடத்தையும், 2-ம் ஆண்டு மாணவிகள் முத்துஜோதி, தர்ஷனா அணி 2-வது இடத்தையும், முதலாம் ஆண்டு மாணவிகள் ஹரினி, அருணாதேவி அணி 3-ம் இடத்தையும் பிடித்தனர். இதில் வணிகநிர்வாகவியல் மற்றும் பொருளியல் துறை மாணவிகள் கலந்துகொண்டனர். பேராசிரியைகள் விஜயலட்சுமி, பார்கவி, செல்லப்பிரியா ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். மாணவிகள் நர்மதா, தர்ஷனா ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். 2-ம் ஆண்டு மாணவி முத்துஜோதி நன்றி கூறினார். ஏற்பாடுகளை தொழில்முனைவு மற்றும் புதுமையாக்கம் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரும், மேலாண்மை மன்ற செயலாளருமான பேராசிரியை தெய்வவீரலட்சுமி செய்திருந்தார்.


Next Story