தொண்டியில் அரசு மகளிர் கலைக்கல்லூரி தொடங்க நடவடிக்கை
ெதாண்டியில் அரசு மகளிர் கலை கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி தலைவி ஷாஜகான்பானு ஜவகர்அலிகான் தெரிவித்தார்.
தொண்டி,
ெதாண்டியில் அரசு மகளிர் கலை கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி தலைவி ஷாஜகான்பானு ஜவகர்அலிகான் தெரிவித்தார்.
பேரூராட்சி தலைவி
தொண்டி பேரூராட்சி 10-வது வார்டில் கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஷாஜகான்பானு ஜவகர் அலிகான். இவர் தொண்டி பேரூராட்சி தலைவராக பொறுப்பேற்றதை தொடர்ந்து பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து வருகிறார். ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. வழிகாட்டுதலின் பேரில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றி வருகிறார். இது குறித்து தொண்டி பேரூராட்சி தலைவி ஷாஜகான் பானு ஜவகர் அலிகான் கூறியதாவது:-
பேரூராட்சியில் பொதுமக்களின் குறைகளை தெரிந்து கொள்ளும் வகையில் அலுவலகத்தில் புகார் பெட்டி வைக்கப்பட்டு குறைகள் களையப்பட்டு வருகிறது.வாரம்தோறும் வழிபாட்டுத்தலங்களில் கிருமி நாசினி தெளித்து பொது சுகாதாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. தொண்டி பேரூராட்சியில் ரூ.2.41 கோடி மதிப்பில் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. 3-வது வார்டில் சத்திரம் மெயின் ரோடு தெரு, அக்ரஹாரம் முதல் குறுக்கு தெரு, காந்தியார் மெயின் ரோடு பகுதிகளில் ரூ.1.60 கோடி மதிப்பில் 1.500 கிலோ மீட்டர் தார் சாலை அமைக்கப்பட உள்ளது. எனது கோரிக்கையை ஏற்று அமைச்சர் தொண்டி பேரூராட்சியில் 7 புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் 100 பழுதான மின்கம்பங்கள் மாற்றுவதற்கு 100 புதிய மின்கம்பங்கள் வந்துள்ளது.
புதிய ஸ்கேன் கருவி
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்ததின் பேரில் தொண்டி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய ஸ்கேன் கருவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு அரசு ஆஸ்பத்திரியாக மாற்றி கூடுதல் டாக்டர்கள் நியமிக்கவும் 24 மணி நேரமும் பொதுமக்களுக்கு மருத்துவ சேவை கிடைக்கவும், சிறுநீரக சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளேன். விரைவில் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்துள்ளார்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி தனது தொகுதி நிதியின் மூலம் தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஐந்து சோலார் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒரு ஹைமாஸ் விளக்கு ஒன்று நிறுவப்பட உள்ளது. கருமாணிக்கம் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 3 புதிய ரேஷன் கடை கட்டிடங்கள் கட்டுவதற்கும், ஒடாவி தெரு பகுதியில் ஒரு லட்சம் லிட்டர் மேல்நிலைத் தொட்டி கட்டுவதற்கும் கோரிக்கை விடுத்துள்ளோம். தொண்டி பேரூராட்சியில் வாரச்சந்தை அமைப்பதற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் பொழுதுபோக்கு பூங்கா அனைத்து வசதிகளுடன் அமைப்பதற்கும் கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் தமிழக அரசுக்கும் திட்ட அறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளது.
மகளிர் கலைக்கல்லூரி
இதே போல் தொண்டியில் அரசு மகளிர் கலை கல்லூரி அமைக்கவேண்டும் என தமிழக முதல்வர் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சரிடம் நேரில் கோரிக்கை விடுத்துள்ளேன்.
அதேபோல் தொண்டியில் போக்குவரத்து பணிமனை விரைவில் அமைத்திட வேண்டும் என்றும் பெங்களூரு, சென்னை போன்ற பெரிய நகரங்களுக்கு தொண்டியிலிருந்து நேரடியாக பஸ் வசதிகள் உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.