தனியார் பனியன் நிறுவன பஸ் மீது அரசு பஸ் மோதல்; 24 பேர் காயம்


தனியார் பனியன் நிறுவன பஸ் மீது அரசு பஸ் மோதல்; 24 பேர் காயம்
x

ஊத்துக்குளி அருகே தனியார் பனியன் நிறுவன பஸ் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 24 பேர் காயம் அடைந்தனர்.

திருப்பூர்

ஊத்துக்குளி

ஊத்துக்குளி அருகே தனியார் பனியன் நிறுவன பஸ் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 24 பேர் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பனியன் நிறுவனம்

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள கொடியம்பாளையம் நால்ரோடு பகுதியில் தனியார் பனியன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் பணிபுரியும் பணியாளர்களை தினமும் பஸ்சில் அழைத்துக் கொண்டு வந்து திரும்பவும் பஸ்சில் கொண்டு விடுவது வழக்கம். அதன்படி நேற்று காலை வழக்கம் போல் பெருமாநல்லூர் பகுதிகளிலிருந்து தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு பனியன் நிறுவன பஸ் வந்து கொண்டிருந்தது.

இந்த பஸ் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து செங்கப்பள்ளி வருவதற்காக புறவழிச்சாலையில் வந்து கொண்டிருந்தது. பஸ்சை ஊத்துக்குளி பாப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரூபானந்தன் (வயது 28) என்பவர் ஓட்டினார். இந்த பஸ்சுக்கு முன்னால் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியின் டிரைவர் திடீரென எவ்வித சிக்னலும் இல்லாமல் பிரேக் போட்டதாக கூறப்படுகிறது.

24 பேர் காயம்

இதன் காரணமாக லாரியில் மோதாமல் இருக்க ரூபானந்தன் உடனடியாக பஸ்சை பிரேக் போட்டு நிறுத்தியுள்ளார். அப்போது தனியார் பனியன் நிறுவன பஸ்சிற்கு பின்னால் கோவையிலிருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ், பனியன் நிறுவன பஸ் மீது மோதியது. இதனால் தனியார் பனியன் நிறுவன பஸ் நகர்ந்து அந்த வழியாக சென்று கொண்டிருந்த கார் மீது உரசியது.

இந்த விபத்தில் அரசு பஸ்சில் பயணம் செய்த 3 பயணிகளும், பனியன் நிறுவன பஸ்சில் பயணம் செய்த 21 தொழிலாளர்களும் காயம் அடைந்தனர்.

உடனே அருகில் உள்ளவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கும், தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். காரில் பயணம் செய்தவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த விபத்துபற்றிய தகவல் கிடைக்கப் பெற்ற ஊத்துக்குளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story