பழுதாகி நின்ற டேங்கர் லாரி மீது அரசு பஸ் மோதல்; ஒருவர் பலி
கன்னிவாடி அருகே பழுதாகி நின்ற டேங்கர் லாரி மீது அரசு பஸ் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். மேலும் 16 பேர் படுகாயம் அடைந்தனர்.
பழுதாகி நின்ற லாரி
ஈரோட்டில் இருந்து அமிலம் ஏற்றிக்கொண்டு நெல்லை நோக்கி டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை, டிரைவர் தேவராஜ் ஓட்டினார். செம்பட்டி-ஒட்டன்சத்திரம் நான்கு வழிச்சாலையில், கன்னிவாடியை அடுத்த தெத்துப்பட்டி புதுப்பாலம் அருகே நேற்று முன்தினம் இரவு 2 மணி அளவில் லாரி வந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென லாரி பழுதடைந்து ரோட்டில் நின்று விட்டது. அதனை நகர்த்த டிரைவர் முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை. இதனால் லாரியை அங்கேயே நிறுத்தி விட்டு தேவராஜ் அருகே நின்று கொண்டிருந்தார்.
லாரி நின்று கொண்டிருந்த பகுதியில் விளக்குகள் எதுவும் இல்லை. இதனால் அந்த பகுதி கும்மிருட்டாக காட்சி அளித்தது. லாரி நிற்பதே தெரியவில்லை.
அரசு பஸ் மோதல்
இந்தநிலையில் கோவையில் இருந்து தேனி நோக்கி அரசு பஸ் ஒன்று சென்றது. அந்த பஸ்சை கோவை செட்டிபாளையத்தை சேர்ந்த சுந்தரராஜ பெருமாள் (வயது 35) ஓட்டினார். அதிகாலை 4 மணி அளவில் அந்த பஸ் தெத்துப்பட்டி புதுப்பாலம் அருகே வந்தது. அப்போது சாலையில் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரியை டிரைவர் கவனிக்கவில்லை. இதனால் லாரி மீது அரசு பஸ் பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில், அரசு பஸ் நான்கு வழிச்சாலையின் ஒரு புறத்தில் இருந்து தடுப்பை தாண்டி மறுபுறத்துக்கு சென்று சாலையோர பள்ளத்துக்குள் பாய்ந்தது. இதில் அரசு பஸ்சின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. பஸ்சில் இருந்த பயணிகள் 'அய்யோ அம்மா' என்று அலறினர். அவர்களது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.
ஒருவர் பலி
இதேபோல் கன்னிவாடி போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஒட்டன்சத்திரம் போலீஸ் துணை சூப்பிரண்டு முருகேசன், கன்னிவாடி இன்ஸ்பெக்டர் வெள்ளையப்பன், சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
இந்த விபத்தில் பஸ்சில் டிரைவர் இருக்கையின் பின்னால் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த கோவை சோமையனூர் தழுவாய் பகுதியை சேர்ந்த அய்யப்பன் (43) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
16 பேர் படுகாயம்
இந்த விபத்தில் டிரைவர் சுந்தரராஜ பெருமாள், அய்யப்பனின் மகள் விஷாலினி (14), ராஜபாளையத்தை சேர்ந்த மகாலட்சுமி (23), உத்தமபாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன் (20), திருப்பூர் சின்னக்கரையை சுவேதா (24) உள்பட 16 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்தில் சிக்கியவர்களை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனை மற்றும் ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. விபத்து குறித்து கன்னிவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.