வடமாநில தொழிலாளியை தாக்கிய அரசு பஸ் கண்டக்டர் கைது
லக்கேஜ் டிக்கெட் கேட்டதால் ஏற்பட்ட தகராறில் வடமாநில தொழிலாளியை தாக்கிய அரசு பஸ் கண்டக்டர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லக்கேஜ் டிக்கெட் கேட்டதால் ஏற்பட்ட தகராறில் வடமாநில தொழிலாளியை தாக்கிய அரசு பஸ் கண்டக்டர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வடமாநில தொழிலாளர்கள்
வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடைபெறுவதை தடுக்கவும், அவர்கள் பாதுகாப்பாக இருக்கவும் அரசு மற்றும் காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று கோவையில் வடமாநில தொழிலாளர்களை சந்தித்து பேசினார்.
இந்த நிலையில் கோவையில் வடமாநில தொழிலாளி தாக்கப் பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
லக்கேஜ் டிக்கெட்
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் முகமது தப்ரேஷ் (வயது 27). கட்டிட தொழிலாளி. இவர் கோவை புலியகுளத்தில் தங்கி உள்ளார். நேற்று இவர் கியாஸ் அடுப்புடன் புலியகுளத்தில் இருந்து காந்திபுரம் நோக்கி சென்ற அரசு பஸ்சில் (எண் 5-ல்) ஏறி பயணம் செய்தார்.
அவர் பஸ்சில் டிக்கெட் எடுத்தார். அப்போது அவர் கொண்டு சென்ற கியாஸ் அடுப்புக்கு லக்கேஜ் டிக்கெட் எடுத்து கட்டணம் செலுத்துமாறு கண்டக்டர் கேட்டுள்ளார். அதற்கு முகமது தப்ரேஷ் ரூ.5 மட்டும் கொடுத்துள்ளார். ஆனால் கண்டக்டர், ரூ.22 கட்டணம் தர வேண்டும் என்று கேட்டு உள்ளார்.
தாக்குதல்
இதனால் கண்டக்டருக்கும், வடமாநில தொழிலாளிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையே அந்த அரசு பஸ் காந்திபுரம் டவுன் பஸ்நிலையத்துக்கு வந்ததும் தகராறு முற்றியது.
அப்போது கண்டக்டர் சிவக்குமார், முகமது தப்ரேஷை. தாக்கியதாக தெரிகிறது. இதில் அவருக்கு வலது கண் அருகே காயம் ஏற்பட்டது.
கண்டக்டர் கைது
இது குறித்து காட்டூர் போலீசில் முகமது தப்ரேஷ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்டக்டர் சிவக்குமாரை கைது செய்தனர்.
பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.