அரசு பஸ் கண்டக்டர் பணியிடை நீக்கம்


அரசு பஸ் கண்டக்டர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 5 Oct 2023 8:15 PM GMT (Updated: 5 Oct 2023 8:15 PM GMT)

பந்தலூர் அருகே, பயணிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அரசு பஸ் கண்டக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

நீலகிரி

பந்தலூர் அருகே, பயணிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அரசு பஸ் கண்டக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

அரசு பஸ்

ஊட்டியில் இருந்து கூடலூர், பந்தலூர் வழியாக கேரள மாநிலம் கள்ளிக்கோட்டைக்கு நேற்று முன்தினம் தமிழக அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த பஸ்சில் பாபு என்பவர் கண்டக்டராக பணியாற்றினார்.

கூடலூருக்கு பஸ் சென்றதும், அதில் பந்தலூர் அருகே காபிக்காடு பகுதிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் ஏறினர். அவர்கள் தங்களது நிறுத்தம் வந்ததும், பஸ்சை நிறுத்துமாறு கண்டக்டர் பாபுவிடம் கூறினர்.

ஆனால் அவர், அந்த நிறுத்தத்தில் பஸ் நிற்காது என்று கூறியதோடு மாணவ-மாணவிகளிடம் கடிந்து கொண்டார். ஆனாலும், தொடர்ந்து வற்புறுத்தியதால், அந்த நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தி மாணவ-மாணவிகளை இறக்கிவிட்டார்.

வாக்குவாதம்

அதன்பிறகு பஸ் புறப்பட்டதும், பயணிகள் சிலர், மாணவ-மாணவிகள்தானே, அவர்களை கடிந்து கொள்ளாமல் இறக்கி விட்டு இருக்கலாமே என்று கூறினர்.

இதனால் ஆத்திரமடைந்த கண்டக்டர் பாபு, இது என்ன லோக்கல் வண்டியா?, கள்ளிக்கோட்டை போய் சேர வேண்டாமா?, அதிகாரி செல்போன் எண் தருகிறேன், வேண்டுமென்றால் பேசிக்கொள்ளுங்கள் என்று கூறியதோடு அடாவடியாக ஒருமையில் பேசினார்.

இதனால் பயணிகளுக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கண்டக்டர் பாபு, அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப் படுகிறது.

பணியிடை நீக்கம்

இது தொடர்பான வீடியோ காட்சி, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. மேலும் சம்பவம் குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்தில் வீடியோ ஆதாரத்துடன் புகார் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரணை நடத்தி பயணிகளிடம் கனிவாக நடந்து கொள்ளாத கண்டக்டர் பாபுவை, பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளனர்.


Next Story