கோமானேரி, கலுங்குவிளை வழியாக சாத்தான்குளத்துக்கு அரசு பஸ் இயக்க வேண்டும்; ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. போக்குவரத்து பொது மேலாளரிடம் மனு
கோமானேரி, கலுங்குவிளை வழியாக சாத்தான்குளத்துக்கு அரசு பஸ் இயக்க வேண்டும் என ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. போக்குவரத்து பொது மேலாளரிடம் மனு கொடுத்தார்.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அருகே உள்ள கோமானேரி, கலுங்குவிளை, நெடுங்குளம், கொம்பன்குளம் வழியாக சாத்தான்குளத்துக்கு அரசு பஸ் இயக்க வேண்டும் என சாலை பாதுகாப்பு நுகர்வோர் குழு உறுப்பினர் போனிபாஸ், ஒன்றிய கவுன்சிலர் ப்ரெனிலா கார்மல் ஆகியோர் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் எம்.எல்.ஏ.விடம் முறையிட்டனர். அவர்களது கோரிக்கையை ஏற்று நெல்லை அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளரை ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் எம்.எல்.ஏ. சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
அதில், "சாத்தான்குளத்தில் இருந்து கலுங்குவிளை, நெடுங்குளம், முனைஞ்சிப்பட்டி வழியாக நெல்லைக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் தடம்-65, தடம் எண்- 165 எச் இரவு நெல்லையில் இருந்து முனைஞ்சிப்பட்டி, கலுங்குவிளை வழியாக சாத்தான்குளத்துக்கு இயக்க வேண்டும். தடம் எண் 137ஏ, 137கே ஆகிய பஸ்கள் காலை, மாலை, நெல்லையில் இருந்து சிந்தாமணி, பேய்க்குளம், பழனியப்பபுரம் வழியாக சாத்தான்குளம், உடன்குடிக்கும், விராக்குளம், பிரண்டார்குளம், மடத்துவிளை, கலுங்குவிளை, வழியாக சாத்தான்குளத்துக்கும் இயக்கப்பட்டு வந்தது. தற்போது இயக்கப்படாததால் மீண்டும் கலுங்குவிளை, நெடுங்குளம் வழியாக இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக் கொண்ட போக்குவரத்து கழக பொது மேலாளர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கர், சாலை பாதுகாப்பு நுகர்வோர் குழு உறுப்பினர் போனிபாஸ், மாவட்ட பொருளாளர் எடிசன், முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெயசீலன்துரை, எம்.எல்.ஏ. உதவியாளர் சந்திரபோஸ் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.