அரசு பஸ்-காய்கறி லாரி நேருக்கு நேர் மோதல்; 3 பேர் பலி


அரசு பஸ்-காய்கறி லாரி நேருக்கு நேர் மோதல்; 3 பேர் பலி
x

செங்கம் அருகே அரசு பஸ்சும், காய்கறி லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பலியாகினர். 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருவண்ணாமலை,

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து அரசு பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலை வழியாக பெங்களூருவுக்கு சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ்சை டிரைவர் மணிவாசகம் ஓட்டிச்சென்றார். அந்த பஸ் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை கடந்து நேற்று அதிகாலை 2.30 மணியளவில் பக்கிரிபாளையம் பகுதியில் சென்றபோது ஒரு லாரியை முந்திச்சென்றது. அப்போது பெங்களூருவில் இருந்து கடலூர் மாவட்டம் பண்ருட்டிக்கு காய்கறி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு எதிரே வந்த லாரியும் பெங்களூரு சென்ற அரசு பஸ்சும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் அரசு பஸ்சை ஓட்டிச்சென்ற டிரைவர் மணிவாசகம், லாரியில் கிளீனராக இருந்த விழுப்புரம் மாவட்டம் டி.குளத்தூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (35) ஆகியோர் அந்த இடத்திலேயே இறந்தனர். 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

மேலும், கவிழ்ந்த லாரியில் இருந்து காய்கறி மூட்டைகள் சரிந்ததோடு அதில் இருந்த காய்கறிகளும் ரோட்டில் சிதறின.

போலீசார் விரைவு

சம்பவ இடத்துக்கு செங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணகுமரன் உள்பட போலீசார் விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். அவரது பெயர் விவரம் தெரியவில்லை.

இந்த சம்பவம் குறித்து செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர்களின் உடல் களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.


Next Story