கலெக்டர் அலுவலகம் முன் அரசு கல்லூரி மாணவர்கள் மறியல்


கலெக்டர் அலுவலகம் முன் அரசு கல்லூரி மாணவர்கள் மறியல்
x

குறித்த நேரத்திற்கு வராத அரசு பஸ்களால் படிப்பு பாதிக்கப்படுவதாக கூறி அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அரியலூர்

சாலை மறியல்

அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்து சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் ஜெயங்கொண்டம் மற்றும் பல்வேறு கிராமங்களில் இருந்து கல்லூரிக்கு அரசு பஸ்களில் வந்து செல்கின்றனர். இந்நிலையில் காலையில் கல்லூரி நேரத்தில் ஜெயங்கொண்டத்தில் இருந்து அரியலூருக்கு அரசு பஸ் சரிவர குறிப்பிட்ட நேரத்திற்கு வருவதில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் இப்பகுதி மாணவ-மாணவிகள் குறித்த நேரத்திற்கு கல்லூரிக்கு செல்ல முடியவில்லையாம். இதைத்தெடர்ந்து மாணவ-மாணவிகளால் கல்லூரியில் முதல் பாடப்பிரிவு வகுப்பிற்கு செல்ல இயலவில்லையாம். இதனால் கல்லூரி நிர்வாகம் தங்களுக்கு ஆப்சென்ட் போட்டு விடுவதாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதேபோல் கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்லும்போதும் போதிய பஸ் வசதி இல்லாததாலும், நேரத்திற்கு வராத அரசு பஸ்சாலும் குறித்த நேரத்திற்கு வீட்டிற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறதாம். இதில் குறிப்பாக மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் எங்களால் சரியாக படிக்க முடியவில்லை.

பேச்சுவார்த்தை

எனவே எங்களுக்கு குறித்த நேரத்திற்கு போதுமான பஸ்கள் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி மாணவ-மாணவிகள் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், தாசில்தார் கண்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சகஅன்பரசு, கார்த்திகேயன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவர்கள் கூறுகையில், போதிய அளவில் பஸ் இயக்கக்கோரி அரசு போக்குவரத்துக்கழகத்தில் தகவல் தெரிவித்தோம். ஆனால் அவர்கள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

போக்குவரத்து பாதிப்பு

எனவே இதனை மாவட்ட கலெக்டர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம் என்று கூறினர். அப்போது அதிகாரிகள் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி கல்லூரி நேரங்களில் போதுமான அளவில் அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட மாணவ-மாணவிகள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன், பரபரப்புடன் காணப்பட்டது.


Next Story