அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலை நிறுத்தம்
தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முடக்கி வைக்கப்பட்டு உள்ள ஒப்படைப்பு விடுப்பு ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும். அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு வழங்கும் அதே தேதியில் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு கல்வி தகுதி அடிப்படையில் அரசு துறையில் உள்ள காலி பணியிடங்களில் பதவி உயர்வு மூலம் பணி நியமனம் செய்து காலமுறை ஊதியம் மற்றும் சட்டப்பூர்வ ஊதியம் வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை ஓய்வூதியத்திற்கு பொருந்தும் வகையில் பணிவரன்முறை செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சியில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பணிகள் பாதிப்பு
இதன் காரணமாக சப்-கலெக்டர் அலுவலகம் மற்றும் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறையில் உள்ள தாலுகா அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. வருவாய் துறை சம்பந்தபட்ட பணிகளுக்கு வந்த பொதுமக்கள் அலுவலர்கள் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதனால் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில் 104 பேரில் 15 பேரும், கிணத்துக்கடவில் 90 பேரில் 12 பேரும், ஆனைமலையில் 107 பேரில் 13 பேரும், வால்பாறையில் 29 பேரில் 12 பேரும், சப்-கலெக்டர் அலுவலகத்தில் 13 பேரில் 6 பேரும் வரவில்லை என்று வருவாய் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.