மழையூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தொடங்கப்படுமா?


மழையூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தொடங்கப்படுமா?
x

மழையூரில் இருபாலர் அரசு பள்ளியில் மாணவர் எண்ணிக்கை அதிகம் உள்ளதால் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தொடங்கப்படுமா? என்று பெற்றோர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

புதுக்கோட்டை

அரசு மேல்நிலைப்பள்ளி

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள மழையூரில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனா். இதில் 500-க்கும் மேற்பட்டோர் பெண்களாக உள்ளனர். மழையூர் சுற்றுவட்டார பகுதியில் செயல்படும் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயா்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவா்கள் மேல்நிலை கல்விக்கு மழையூா் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தான் வரவேண்டும்.

மாணவியர் விடுதி அமைக்க வேண்டும்

கறம்பக்குடி தாலுகாவில் கறம்பக்குடியில் மட்டுமே பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. ரெகுநாதபுரம், முள்ளங்குறிச்சி, வெட்டன் விடுதி உள்ளிட்ட பகுதிகளில் இருபாலர் மேல் நிலைப்பள்ளிகளே செயல்பட்டு வருகின்றன. எனவே தாலுகாவில் அதிக மாணவ-மாணவிகள் பயிலும் பள்ளியாக உள்ள மழையூரில் தனியாக அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தொடங்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். மேலும் மழையூரில் மாணவியர் விடுதி அமைக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

கோரிக்கை

மழையூரை சுற்றி உள்ள பகுதிகளில் நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவிகளை மேல்நிலை கல்விக்கு மழையூர் பள்ளியிலேயே சேர்க்கும் நிலை உள்ளது. இங்கு இருபாலர் பள்ளி மட்டுமே செயல்படுவதாலும், மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளதாலும் சிலர் தங்கள் பெண் குழந்தைகளை கறம்பக்குடி மற்றும் ஆலங்குடியில் செயல்படும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேர்த்து வருகின்றனர். மழையூரில் தனியாக பெண்கள் பள்ளி தொடங்கினால் பெற்றோர்கள் அச்சமின்றி பள்ளிக்கு அனுப்பி வைப்பர். எனவே மாணவிகளின் கல்வி தரத்தை மேம்படுத்த தனியாக அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தொடங்கவும் மாணவியர் விடுதி அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

கல்வி தரம் உயரும்

மழையூரை சேர்ந்த முருகேசன் கூறுகையில், கறம்பக்குடி தாலுகாவில் மழையூர் தனி வருவாய் பிர்காவாக உள்ளது. மழையூரை சுற்றி 10-க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது செயல்பட்டுவரும் இருபாலர் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கறம்பக்குடி- புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் மிக நெருக்கடியான சூழலிலேயே பள்ளி இயங்கிவருகிறது. ஆசிரியர்கள் பற்றாக்குறையும் உள்ளது. சில வகுப்புகளில் 60-க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். கறம்பக்குடி தாலுகாவில் ஒரே ஒரு பெண்கள் பள்ளி உள்ள நிலையில் மாணவிகளின் நலன்கருதி தனியாக பெண்கள் பள்ளி தொடங்கி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால் கல்வி தரம் உயரும் என்றார்.

மாணவிகள் சாதனை படைப்பர்

மழையூர் பொன்னன் விடுதி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணகுமாரி கூறுகையில், மழையூர் சுற்றுவட்டார பகுதிகளில் போதிய பஸ் வசதி இல்லாத கிராமங்கள் அதிகம் உள்ளன. பல மாணவிகள் 5 முதல் 10 கி.மீட்டர் நடந்தே பள்ளிக்கு சென்று வருகின்றனர். இருபாலர் பள்ளிக்கு வளர் இளம்பருவ பிள்ளைகளை அனுப்பிவிட்டு பெற்றோர்கள் பதட்டத்துடனே இருக்க வேண்டி உள்ளது. இங்கு பெண்கள் பள்ளி விடுதி வசதி போன்றவை இல்லாததால் பலர் ஆலங்குடி, கறம்பக்குடி பள்ளிகளில் மாணவிகளை சேர்த்து உள்ளனர். மழையூர் பள்ளியில் நெருக்கடியான நிலையில் படித்தே அரசு ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். சீட் பெற்று மாணவிகள் சாதித்து உள்ளனர். எனவே மழையூரில் பெண்கள் மேல்நிலைப்பள்ளியும், மாணவியர் விடுதியும் அமைத்தால் இந்த சாதனை பன்மடங்காக பெருகும் என்றார்.


Next Story