விநாயகர் சதுர்த்தி விழாவின்போது அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்- கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வேண்டுகோள்
விநாயகர் சதுர்த்தி விழாவின்போது அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி விழாவின்போது அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், விநாயகர் சதுர்த்தி முன்னேற்பாடு, பாதுகாப்பு பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான கலந்தாலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
விநாயகர் சிலை வைக்கப்படவுள்ள இடம் தனியாருக்கு சொந்தமாக இருந்தால், நில உரிமையாளரிடமும், அரசு நிலமாக இருந்தால் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடமும் தடையின்மைச் சான்று பெற வேண்டும். ஒலி அமைப்பிற்கு சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் சான்று பெற வேண்டும். சிலை வைக்கப்படவுள்ள இடத்தில் அமைக்கப்படும் தற்காலிக பந்தல்கள், தீ பாதுகாப்பு விதிகளை பின்பற்றி அமைக்கப்பட்டுள்ளதா ? உகந்தவையா ? என்பது குறித்து தீ மற்றும் மீட்பு பணிகள் அலுவலர்களிடம் சான்று பெற வேண்டும்.
தற்காலிக மின் வசதி பெறுவது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திடமிருந்து சம்மத கடிதம் பெறவேண்டும். மேலும், நிறுவப்பட உள்ள சிலைகள் சுற்று சூழலுக்கு பாதுகாப்பற்ற பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட வர்ணங்களை உபயோகப்படுத்தாமல் களிமண்ணால் செய்யப்பட்டிருக்க வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களால் தற்காலிக பந்தல்களை அமைக்கக்கூடாது. பந்தல்களுக்குள்ளே சென்று வழிபடவும் திரும்பி வரவும் போதுமான வசதிகள் செய்யப்படவேண்டும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு
எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்கள் எதையும் பந்தல்களுக்கு அருகே வைக்கக்கூடாது. நிறுவப்படவுள்ள சிலைகள் மேடையிலிருந்து 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். வேற்று மத வழிபாட்டு தலங்கள், ஆஸ்பத்திரிகள், கல்விக்கூடங்கள் அருகில் சிலைகள் வைக்க கூடாது. ஒலிபெருக்கிகளை உபயோகிப்பதற்கு காலையில் 2 மணிநேரமும் மாலையில் 2 மணிநேரமும் மட்டுமே அனுமதி வழங்கப்பட வேண்டும்.
சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் போதிய விளக்கு வசதிகள் செய்யபட வேண்டும். பொது அமைதி, பாதுகாப்பு, மத நல்லிணக்கம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை பராமரிக்கும் நோக்கத்தில் வருவாய் துறை, போலீஸ் துறை, மாசுக்கட்டுப்பாடு துறை அலுவலர்களால் அவ்வப்போது விதிக்கப்படும் நிபந்தனைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.
வழிகாட்டு நெறிமுறைகள்
போலீஸ் துறை, மாசுக்கட்டுப்பாடு துறை, உள்ளாட்சி துறை ஆகியோருடன் கலந்து ஆலோசித்து சிலைகள் கரைக்கப்பட உள்ள இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, பட்டியல் முடிவு செய்யப்படும். முடிவு செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகள் கரைக்கப்பட வேண்டும். போலீஸ் துறையினரால் அங்கீகரிக்கப்பட்ட வழிகளில் மட்டுமே ஒழுங்கான முறையில் ஊர்வலம் செல்ல வேண்டும். விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ள இடங்கள், கரைக்கப்படவுள்ள இடங்கள், ஊர்வலம் செல்லும் வழிகளில் பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்க கூடாது.
ஈரோடு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை, தொடர்புடைய அமைப்பினர் முழுமையாக பின்பற்றிட வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழாவின்போது சட்டம், ஒழுங்கை அனைத்து அமைப்பினரும் பின்பற்றி மாவட்ட நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ் மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.