விழுப்புரத்தில்2 ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் அரசு சட்டக்கல்லூரி விடுதிகள்பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா?


விழுப்புரத்தில்2 ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் அரசு சட்டக்கல்லூரி விடுதிகள்பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா?
x
தினத்தந்தி 7 Aug 2023 12:15 AM IST (Updated: 7 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் 2 ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் அரசு சட்டக்கல்லூரி விடுதிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா? என்று எதிா்பாா்த்துள்ளனா்.

விழுப்புரம்


விழுப்புரத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தின்போது அரசு சட்டக்கல்லூரி கட்ட விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் அருகில் சாலாமேடு பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசு சட்டக்கல்லூரிக்கான கட்டுமான பணிக்கு அப்போதைய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அடிக்கல் நாட்டினார். ரூ.70 கோடி மதிப்பில் அரசு சட்டக்கல்லூரி புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இதனை கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 28-ந் தேதி அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து திறந்து வைத்தார்.

அரசு சட்டக்கல்லூரி விடுதிகள்

இந்த சட்டக்கல்லூரியில் விழுப்புரம் நகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். வெகு தொலைவில் உள்ள இடங்களில் இருந்து இக்கல்லூரிக்கு படிக்க வரும் மாணவ- மாணவிகளின் சிரமத்தை போக்கவும், அவர்கள் விழுப்புரத்திலேயே தங்கி படிக்க வசதியாகவும் மாணவ- மாணவிகளுக்கு தனித்தனியாக அரசு சார்பில் விடுதிகள் கட்டப்பட்டன.

விழுப்புரம் அருகே பிடாகம் கிராமத்தில் மாணவர்கள் விடுதியும், பெரும்பாக்கத்தில் மாணவிகள் விடுதியும் கட்டப்பட்டன. இந்த விடுதிகளில் தலா 250 மாணவ- மாணவிகள் தங்கும் வசதியுடன் அறைகள் உள்ளன. இந்த 2 விடுதிகளும் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டபோதிலும் மாணவ- மாணவிகளின் பயன்பாட்டுக்கு வர இருந்த நிலையில் கொரோனா தொற்று வேகமாக பரவியதால் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தடைபட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்தன. இதனால் அந்த விடுதிகள் மாணவ- மாணவிகளின் பயன்பாட்டுக்கு வரவில்லை.

கொரோனா சிகிச்சை மையம்

மேலும் அந்த சமயத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் கொரோனா தற்காலிக சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. அந்த வகையில் அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் விடுதியும், மாணவிகள் விடுதியும் தற்காலிகமாக கொரோனா சிகிச்சை மையங்களாக பயன்படுத்தப்பட்டன. அந்த 2 மையங்களிலும் படுக்கை வசதிகள், மருத்துவ உபகரணங்கள் கொண்டு வரப்பட்டு நோயாளிகளை அனுமதித்து உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதன் பின்னர் நோய் தொற்று படிப்படியாக குறைந்து ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்ட நிலையில் அரசு சட்டக்கல்லூரியில் நேரடி வகுப்புகள் தொடங்கின. ஆனால் சில மாதங்கள் வரை அந்த 2 விடுதிகளும் கொரோனா சிகிச்சை மையங்களாகவே பயன்படுத்தப்பட்டு வந்ததால் சட்டக்கல்லூரி மாணவ- மாணவிகள் அந்த விடுதிகளில் தங்க முடியாத நிலைமை ஏற்பட்டது. இதனால் அவர்கள், வெளியில் தனியாக வாடகைக்கு அறை எடுத்து தங்கி படித்து வந்தனர்.

பராமரிப்பின்றி பூட்டிக்கிடக்கிறது

இந்நிலையில் கொரோனா நோய் தொற்று முழுமையாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியபோதிலும் இதுநாள் வரையிலும் அந்த 2 விடுதிகளையும் சுத்தம் செய்து சட்டக்கல்லூரி மாணவ- மாணவிகளின் பயன்பாட்டுக்காக கொண்டு வர எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவ்விடுதிகளில் இருந்து மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் வெளியே எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் கட்டில்கள், இன்னும் எடுக்கப்படாமல் உள்ளேயே இருப்பதால் அவையும் வீணாகி வருகிறது.

இவ்வாறு கடந்த 2 ஆண்டுகளாகவே இந்த 2 விடுதிகளும் பராமரிப்பின்றி பூட்டிக் கிடப்பதால் அதனை சமூகவிரோதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர். இரவு நேரம் மட்டுமின்றி பகல் நேரத்தில்கூட அந்த விடுதிகளின் முன்பக்க இரும்புக்கதவுகள், மதில் சுவர் வழியாக சமூகவிரோதிகள் ஏறி உள்ளே குதித்து அங்கு அமர்ந்து மது அருந்துவது, சூதாடுவது உள்ளிட்ட பலவித சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். விடுதி கட்டிடங்களின் பிரதான நுழைவுவாயில் கதவு கண்ணாடிகள், ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்திருப்பதற்கு சமூகவிரோதிகளின் அட்டகாசங்களே காரணம் என்பதை நமக்கு உணர்த்துகிறது. குறிப்பாக பெரும்பாக்கம் மாணவிகள் விடுதியில் இருந்து சற்று தொலைவிலேயே டாஸ்மாக் கடை அமைந்துள்ளதால் அந்த விடுதியின் வளாகத்தை மதுப்பிரியர்கள், மது அருந்தும் கூடமாக பயன்படுத்தி வருகின்றனர்.

பயன்பாட்டுக்கு வருமா?

அரசு சட்டக்கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு அனைத்து அடிப்படை வசதிகளுடன் விடுதிகள் இருந்தும் அவை பயன்பாடின்றி பூட்டியே கிடப்பதால் மாணவ- மாணவிகள், வெளியில் அதிக வாடகை கொடுத்து அறை எடுத்து தங்கும் நிலைமைக்கு தொடர்ந்து தள்ளப்பட்டு வருகின்றனர். அவ்வாறு தங்குவதால் அவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி வருகிறது. எனவே பிடாகம், பெரும்பாக்கத்தில் பராமரிப்பின்றி பூட்டிக்கிடக்கும் அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகள் விடுதியை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?.


Next Story