அரசு-தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்கள் திடீர் மோதல்


அரசு-தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்கள் திடீர் மோதல்
x

அரசு-தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்கள் திடீரென மோதிக்கொண்டனர்.

திருச்சி

அரசு-தனியார் பஸ்கள்

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் இருந்து திருச்சி மத்திய பஸ் நிலையம் நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று காலை வந்தது. அப்போது அதே வழித்தடத்தில் தனியார் பஸ் ஒன்றும் மத்திய பஸ் நிலையம் நோக்கி வந்தது.

அந்த பஸ்கள் விமான நிலைய பஸ் நிறுத்தம் வந்தபோது, யார் முதலில் மத்திய பஸ் நிலையத்துக்கு செல்வது என்பதில் இரு பஸ் டிரைவர்களுக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. ஒவ்வொரு பஸ் நிறுத்தத்திலும் இரு பஸ் டிரைவர்களும் ஒருவருக்கு ஒருவர் முந்திக்கொண்டும், வழிவிடாமலும் போட்டா-போட்டி போட்டுக்கொண்டு பஸ்சை ஓட்டினர்.

தகராறு-மோதல்

இரு பஸ்களும் மத்திய பஸ் நிலையத்தை வந்தடைந்ததும், அங்கு 2 பஸ் டிரைவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, அரசு பஸ் மீது வேண்டும் என்றே மோதுவது போல் தனியார் பஸ்சை அதன் டிரைவர் ஓட்டி வந்து நிறுத்தியுள்ளார்.

இதனால் அரசு பஸ் டிரைவர் தனியார் பஸ் ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. உடனே ஆத்திரம் அடைந்த தனியார் பஸ்சின் கண்டக்டர் அரசு பஸ் டிரைவரை காலணியால் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அரசு-தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

பரபரப்பு

இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கினர். இதனால் அங்கு பயணிகள் கூட்டம் திரண்டது. இதுபற்றி தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் இருதரப்பினரையும் சமரசம் செய்து போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச்சென்றனர்.

இந்த சம்பவத்தால் மத்திய பஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அத்துடன் போக்குவரத்தும் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.

தொடரும் போட்டா-போட்டி

கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் பஸ் டிரைவர்கள் போட்டி போட்டுக்கொண்டு பஸ்சை ஓட்டி வந்த போது, பாரதியார் சாலையில் ஒரு பஸ் கட்டுப்பாட்டை இழந்து ரெயில்வே ஊழியர் மீது மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அதன் பிறகும் பஸ்களுக்கு இடையே போட்டி தொடர்ந்து கொண்டு இருப்பதற்கு இந்த சம்பவமும் ஒரு உதாரணம். எனவே பஸ் டிரைவர்களுக்கு இடையே உள்ள போட்டியில் பெரிய அசம்பாவிதம் ஏற்படும் முன்பு போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story