ஆனைமலையில் மதுபாராக மாறும் அரசு பள்ளி வளாகம்
ஆனைமலையில் அரசு பள்ளி மதுபாராக மாறி வருவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பொள்ளாச்சி
ஆனைமலையில் அரசு பள்ளி மதுபாராக மாறி வருவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மதுபாரான பள்ளி வளாகம்
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆனைமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இரவு நேரங்களில் பள்ளி வளாகத்திற்குள் செல்லும் மர்ம நபர்கள் அங்கேயே அமர்ந்து மது அருந்துகின்றனர்.
பின்னர் காலி பாட்டில்களை பள்ளி வளாகத்திற்குள் வீசி செல்கின்றனர். இதனால் உடைந்து கிடக்கும் பாட்டில் துண்டுகள் மாணவர்களின் கால்களை பதம் பார்க்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. பள்ளி வளாகம் இரவு நேர மதுபாராக மாறி வருகிறது. எனவே பள்ளி வளாகத்தில் மது அருந்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
நடவடிக்கை எடுக்கப்படுமா?
ஆனைமலை அரசு பள்ளி வளாகத்திற்குள் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் புகுந்து மது அருந்துகின்றனர். பின்னர் மதுபாட்டில்கள், டம்ளர் போன்றவற்றை ஆங்காங்கே வீசி விட்டு செல்கின்றனர். போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில் அரசு பள்ளி வளாகத்திற்குள் மர்ம நபர்கள் மது அருந்துவதை தெரிந்து, மாணவர்களும் தவறான பாதைக்கு செல்ல வாய்ப்பு உள்ளது.
எனவே பள்ளி வளாகத்திற்குள் மது அருந்தும் நபர்கள் குறித்த விவரங்களை சேகரிக்க வேண்டும். அவர்கள் மீது போலீசில் புகார் கொடுத்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் பள்ளி வளாகத்திற்குள் செல்வதை தடுக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.