மாணவர்களை கம்பால் அடித்த அரசு பள்ளி தலைமை ஆசிரியைபெற்றோர் முற்றுகையிட்ட
கோவை அருகே அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களை தலைமை ஆசிரியை கம்பால் அடித்தார். இதனால் பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சின்னியம்பாளையம்
கோவை அருகே அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களை தலைமை ஆசிரியை கம்பால் அடித்தார். இதனால் பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாணவர்களை அடித்த தலைமை ஆசிரியை
கோவை அருகே சின்னியம்பாளையத்தில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியை சாந்தாமணி. நேற்று முன்தினம் பள்ளி நேரத்தில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 6 பேர் வகுப்பறையில் இருந்த தெர்மா கோல் சீட்டுகளை எடுத்து ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடி கொண்டிருந்தனர்.
இதை பார்த்த தலைமை ஆசிரியை சாந்தாமணி, மாணவர்களை கண்டித்து உள்ளார். ஆனாலும் மாணவர்கள் விளையாடிக் கொண்டு இருந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தலைமை ஆசிரியை விளையாட்டிக் கொண்டு இருந்த 6 மாணவர்களின் முதுகில் கம்பால் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவர்களின் முதுகு மற்றும் கைகளில் காயத்தழும்பு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து மாலையில் வீடு திரும்பிய மாணவர்கள், பள்ளியில் நடந்தது குறித்து தங்களின் பெற்றோர்களிடம் கூறி உள்ளனர்.
பள்ளியை பெற்றோர் முற்றுகை
இந்த நிலையில் நேற்று காலை பள்ளியின் முன்பு பெற்றோர்கள் திரண்டனர். அவர்கள், தலைமை ஆசிரியை சாந்தாமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி பள்ளியை முற்றுகை யிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் வட்டார கல்வி அலுவலர் தமிழ் செல்வி மற்றும் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் பள்ளிக்கு விரைந்து வந்து பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினா். மேலும் தலைமை ஆசிரியையிடமும் மாணவர்களை அடித்ததற் கான காரணத்தை கேட்டு அறிந்தனர்.
எச்சரிக்கை
இதையடுத்து பள்ளி மேலாண்மை குழுவினர், பெற்றோரை சமாதானப்படுத்தினர். அதை ஏற்று பெற்றோர் தரப்பில் தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கூறினர். மேலும் தலைமை ஆசிரியையிடம் இனி வரும்காலங்களில் இதுபோன்று நடந்து கொள்ளக்கூடாது என்று எச்சரித்தனர். இதைத்தொடர்ந்து பெற்றோர் கலைந்து சென்றனர்.
அதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் 6 பேருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
கல்வி அதிகாரி விளக்கம்
இதுகுறித்து தொடக்க கல்வி அலுவலர் புனிதா கூறியதாவது:-
இந்த பள்ளியில் 300 மாணவர்கள் படிக்கிறார்கள். தலைமை ஆசிாியை உள்பட 8 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இதில் 2 ஆசிாியர்கள் மருத்துவ விடுப்பிலும், ஒரு ஆசிரியர் பயிற்சிக்கும் சென்று உள்ளனர். நேற்று முன்தினம் ஸ்மாா்ட் வகுப்பறைக்காக தெர்மாக்கோலில் சில அலங்கார பொருட்கள் கொண்டு வரப்பட்டு உள்ளது.
அதை மாணவர்கள் மின்விசிறியில் தூக்கி வீசி விளையாடி உள்ளனர். அப்போது தெர்மாக்கோல் உடைந்து பிற மாணவர்களின் கண்களில் விழுந்து உள்ளது.
இதை பார்த்த தலைமை ஆசிரியை கண்டித்தும் மாணவர்கள் கேட்காமல் விளை யாடினர். இதனால் மற்ற மாணவர்களின் நலன் கருதி கம்பால் அடித்து உள்ளார்.
பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர் மீது நடவடிக்கை வேண்டாம் என்று பெற்றோர் கூறி விட்டனர். தலைமை ஆசிரியையிடம் இது போல் நடந்து கொள்ளக்கூடாது என்று கடிதம் எழுதி வாங்கி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.