அரசு பள்ளி ஆசிரியைக்கு ஒரு மாதம் சிறை


அரசு பள்ளி ஆசிரியைக்கு ஒரு மாதம் சிறை
x

அரசு பள்ளி ஆசிரியைக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திருச்சி

திருச்சி பாலக்கரையை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இவரிடம் கடந்த 2019-ம் ஆண்டு லால்குடி தாலுகா வாளாடியை சேர்ந்த சித்ரா என்பவர் ரூ.3½ லட்சம் கடனாக வாங்கியிருந்தார். அந்த பணத்தை வட்டியுடன் திரும்ப செலுத்த கோவிந்தராஜிடம் சித்ரா காசோலை வழங்கியுள்ளார். ஆனால், சித்ராவின் வங்கி கணக்கில் பணம் இல்லாததால் அந்த காசோலை திரும்பி வந்துள்ளது. இதனால் ஏமாற்றம் அடைந்த கோவிந்தராஜ் இது குறித்து திருச்சி 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரணை செய்த மாஜிஸ்திரேட்டு பாலாஜி, சித்ராவுக்கு ஒரு மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ.4 லட்சத்து 48 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். அத்துடன் அபராத தொகையை கோவிந்தராஜுக்கு வழங்க அவர் உத்தரவிட்டார். அபராத தொகையை 2 மாதங்களுக்குள் சித்ரா செலுத்த தவறினால் அவர் மேலும் 15 நாட்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. சிறை தண்டனை பெற்ற சித்ரா மருதூரில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story