மாணவன் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


மாணவன் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
x

மாணவன் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

பெரம்பலூர்

விபத்தில் மாணவன் சாவு

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, நமையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு முல்லை அரும்பு என்ற மனைவியும், ஒரு மகள், 3 மகன்களும் உண்டு. ஆறுமுகம் தனது குடும்பத்தினருடன் கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுகா, கீழ் செருவாய் கிராமத்தில் தங்கியிருந்து, கூலி வேலைக்கு சென்று குடும்பம் நடத்தி வந்தார்.

கடந்த 2010-ம் ஆண்டு அவரது மூத்த மகன் அருண்குமார் திட்டக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். அந்த ஆண்டு அக்டோபர் மாதம் 21-ந் தேதி அவன் பள்ளிக்கு அரசு பஸ்சில் சென்றான். அப்போது டிரைவர் திடீரென்று பிரேக் பிடித்ததில் பஸ்சின் முன்பக்க படிக்கட்டு வழியாக கீழே விழுந்ததில் படுகாயமடைந்த அருண்குமார், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

நஷ்டஈடு வழங்க உத்தரவு

இது குறித்து திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பாக அருண்குமார் குடும்பத்தினர் பெரம்பலூர் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், ரூ.3 லட்சத்து 74 ஆயிரத்தை நஷ்டஈடாக அருண்குமார் குடும்பத்தினருக்கு வழங்க விழுப்புரம் கோட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30-ந் தேதி கோர்ட்டு உத்தரவிட்டது.

ஆனால் நஷ்டஈடு தொகை அதிகமாக உள்ளதாக கூறி அரசு போக்குவரத்து கழகம் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தற்போது வட்டியுடன் ரூ.18 லட்சம் வழங்க உத்தரவிட்டது.

அரசு பஸ் ஜப்தி

ஆனால் அந்த நஷ்டஈடு தொகையையும் விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் வழங்காததால், பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழக பஸ்களில் ஏதேனும் ஒன்றை ஜப்தி செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் மதுரையில் இருந்து பயணிகளுடன் விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பஸ் நேற்று காலை பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்துக்கு வந்தது. அப்போது அங்கிருந்த நீதிமன்ற ஊழியர்கள், அந்த பஸ்சை ஜப்தி செய்தனர். அந்த பஸ்சில் இருந்த பயணிகள் மாற்று பஸ்சில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து ஜப்தி செய்யப்பட்ட பஸ், பெரம்பலூர் நீதிமன்ற வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story