விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் அரசு டவுன் பஸ் ஜப்தி


விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் அரசு டவுன் பஸ் ஜப்தி
x

விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் குடியாத்தத்தில் அரசு டவுன் பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

வேலூர்

விபத்தில் காயம்

குடியாத்தம் நெல்லூர்பேட்டை பாவோடும் தோப்பு பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கார்த்தி (வயது 30). இவரும், குடியாத்தம் கோபாலபுரம் குல்லாரி தெருவை சேர்ந்த கோவில் பூசாரி பாலாஜி (30) என்பவரும் மோட்டார் சைக்கிளில் கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது வேலூரில் இருந்து வந்து குடியாத்தம் பஸ் நிலையத்திற்கு வந்த அரசு பஸ் கார்த்தி ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கார்த்திக் கை உள்ளிட்ட பகுதியில் பலத்த காயமும் பாலாஜிக்கு கால் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது. அவர்கள் வழக்கறிஞர் வி.ரஞ்சித்குமார் மூலமாக குடியாத்தம் சார்பு நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மீது வழக்கு தொடர்ந்தனர்.

இழப்பீடு வழங்க வில்லை

வழக்கை விசாரித்த குடியாத்தம் சார்பு நீதிபதி சுந்தர்ராஜ் கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் கார்த்திக்கிற்கு 4 லட்சத்து 78 ஆயிரத்து 500 ரூபாயும், பாலாஜிக்கு 1 லட்சத்து 16 ரூபாயும் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டார். ஆனால் போக்குவரத்து கழகம் சார்பில் இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை.

இதனையடுத்து மீண்டும் இருவரும் இழப்பீடுதொகை வழங்க நிறைவேற்று மனு அளித்தனர். அதன்பேரில் மனுவை விசாரித்த சார்பு நீதிபதி ஜி.பிரபாகரன் காயம் அடைந்த கார்த்திக்கு வட்டியுடன் சேர்த்து 7 லட்சத்து 61 ஆயிரத்து 544 ரூபாயும், பாலாஜிக்கு ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 926 ரூபாயும் வழங்க ஜனவரி மாதம் 23-ந் தேதி உத்தரவிட்டார். உத்தரவை ஒரு மாதத்தில் நிறைவேற்றுமாறும், இல்லையென்றால் அரசு பஸ்சை ஜப்தி செய்யுமாறும் உத்தரவு பிறக்கப்பட்டது.

டவுன் பஸ் ஜப்தி

நீதிபதி உத்தரவிட்டு ஒரு மாதம் ஆகியும் இழப்பீடு பணம் வழங்கப்படாததால் நேற்று காலையில் குடியாத்தம் புதிய பஸ் நிலையத்தில் குடியாத்தத்தில் இருந்து காட்பாடி சென்று வரும் டவுன் பஸ்சை குடியாத்தம் சார்பு நீதிமன்ற முதுநிலை நீதிமன்ற கட்டளை நிறேவேற்றுனர் ராஜேந்திரன் மற்றும் வழக்கறிஞர் ரஞ்சித்குமார், பாதிக்கப்பட்ட நபர்களுடன் ஜப்தி செய்து குடியாத்தம் கோர்ட்டு வளாகத்திற்கு கொண்டு சென்றனர்.

போக்குவரத்து துறை அதிகாரிகள் ஒரு மாத கால அவகாசத்திற்குள் இழப்பீடு தொகையை செலுத்தி விடுவதாக சார்பு நீதிபதி பிரபாகரிடம் மனு அளித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட அவர் பஸ்சை விடுவிக்க உத்தரவிட்டார்.


Related Tags :
Next Story