பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்தி வழங்க வேண்டும்-குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்


பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்தி வழங்க வேண்டும்-குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
x

பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்று குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.

திருச்சி

பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்று குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.

குறைதீர் கூட்டம்

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வேளாண் இணை இயக்குனர் முருகேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மல்லிகா, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் எஸ்தர்ஷீலா உள்பட அரசு அதிகாரிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அயிலை. சிவசூரியன் பேசும்போது, "வாழை உள்ளிட்ட ஆண்டு பயிர்களை காப்பாற்றவும், குடிநீர் மற்றும்இதர தேவைகளுக்காகவும் உய்யகொண்டான், கட்டளை கால்வாய் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பாசன கால்வாய்களிலும் தண்ணீர் கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த வாரம் வீசிய சூறை காற்றில் மாவட்டத்தில் அந்தநல்லூர், மண்ணச்சநல்லூர், லால்குடி, மணிகண்டம், ஒன்றிய பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த ஆயிரக்கணக்கான வாழைகள் ஒடிந்து விவசாயிகளுக்கு பெரும்இழப்பை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசிடம் இருந்து உரிய இழப்பீட்டை பெற்று தர வேண்டும்" என்றார்.

பால் கொள்முதல் விலை

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்க மாநில இணைச் செயலாளர் கணேசன் பேசும்போது, "பால் கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள ஆவினை மீட்டெடுக்க வேண்டும். இதேநிலை தொடர்ந்தால் விவசாயிகளாகிய எங்களுக்கு நஷ்டம் ஏற்படும். ஆவினில் இருந்து நாங்கள் வெளியேறிவிட்டால் ஆவினை மூடுகிற நிலை ஏற்பட்டுவிடும். எனவே வருகிற 5-ந் தேதி பால்வளத்துறை தொடர்பான மானியக் கோரிக்கையின்போது, பால் கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்து அறிவிக்காவிட்டால் இனி, நாங்கள் தனியாரிடம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்" என்றார்.

வேளாண் விளைபொருள்

பாரதீய கிசான் சங்க மாநில செயலாளர் வீரசேகரன், ஒரு மாவட்டம் ஒரு வேளாண் விளைப்பொருள் என்ற அடிப்படையில் புதிய வேளாண் தொழில் முனைவோரை உருவாக்கும் திட்டத்தை மாவட்ட தொழில் மையத்திடம் ஒப்படைத்திருப்பது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. இதை வேளாண்துறை மற்றும் வேளாண் வணிகத்துறை வாயிலாக செயல்படுத்த வேண்டும் என்றார். இதேபோல் மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினார்கள்.


Next Story