அரசு பஸ் இயக்க வேண்டும்
தோட்ட தொழிலாளர்களுக்காக அரசு பஸ் இயக்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்ட தோட்ட தொழிலாளர்கள் சங்கத்தின் (ஐ.என்.டி.யூ.சி.) வருடாந்திர ஆய்வுக் கூட்டம் குன்னூரில் நடைபெற்றது. இதற்கு செயல் தலைவர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார். துணை தலைவர் சின்னதம்பி முன்னிலை வகித்தார். பொது செயலாளர் ராமலிங்கம் வரவேற்றார். கூட்டத்தில் தேயிலை எஸ்டேட் தொழிலாளர்கள் நலன் கருதி உட்லாண்ட்ஸ் எஸ்டேட் மற்றும் முசாபரி பகுதிகளுக்கு அரசு பஸ்சை இயக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் எஸ்டேட்டுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் யாருக்கேனும் மரணம் நிகழ்ந்தால், அந்த டிவிஷனில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் ½ நாள் விடுப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து சங்க நிர்வாகிகள் மாவட்ட தலைவர் முகமது தலைமையில், கூடலூர் பகுதிக்கு சென்று அங்குள்ள எஸ்டேட் தொழிலாளர்களின் குறைகள் மற்றும் முக்கிய பிரச்சினைகளை கேட்டறிந்தனர். அங்கு நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் வருகிற ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் சங்கத்தின் மகா சபை கூட்டத்தை கூட்டுவது, பொதுக்குழுவில் வரவு, செலவு கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. முடிவில் கூடலூர் துணை தலைவர் ஆசீர் நன்றி கூறினார்.