தொண்டி-திருவெற்றியூர் இடையே அரசு பஸ் இயக்க வேண்டும்-எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை
தொண்டி-திருவெற்றியூர் இடையே அரசு பஸ் இயக்க வேண்டும் என்று எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தொண்டி,
தொண்டி பேரூராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல் கட்சி சார்பில் கருமாணிக்கம் எம்.எல்.ஏ.வை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தொண்டி அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். தொண்டியில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையை விரைவில் அமைக்க வேண்டும். தொண்டி சையது முகமது அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். திருவாடானையில் இருந்து வெள்ளையபுரம் வழியாக வட்டானம் வரை செல்லும் அரசு டவுன் பஸ்சை தொண்டி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். தொண்டி-திருவெற்றியூர் இடையே அரசு பஸ் இயக்க வேண்டும். தேவகோட்டை வரை வந்து செல்லும் பெங்களூரு அரசு பஸ்களை தொண்டி வரை நீட்டிப்பு செய்து தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனுவைப் பெற்றுக் கொண்ட கருமாணிக்கம் எம்.எல்.ஏ. பொதுமக்களின் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அப்போது தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவகர் அலிகான், மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன், தொண்டி தி.மு.க. நகர செயலாளர் இஸ்மத் நானா, நகர் காங்கிரஸ் தலைவர் காத்த ராஜா, மாநில மீனவர் காங்கிரஸ் செயலாளர் முத்து ராக்கு உள்பட பலர் கலந்து கொண்டனர்.