நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்துவது குறித்து அரசு முடிவெடுக்கும்-சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி


நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்துவது குறித்து அரசு முடிவெடுக்கும்-சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி
x

நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்துவது குறித்து அரசு முடிவெடுக்கும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீதிபதிகளுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அரசுக்கு வந்துள்ளது. மத்திய அரசு ஒரு சீராய்வு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவின் அடிப்படையில் என்ன தீர்ப்பு கிடைக்கிறதோ அதனை தமிழக அரசு நிறைவேற்றி தான் ஆக வேண்டும். இருந்தாலும் நீதிபதிகளின் கோரிக்கை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் காரணத்தினால் அதை பற்றி நாங்கள் தெளிவாக சொல்ல முடியவில்லை. இந்த விவகாரத்தில் கருத்துகளை கேட்டு அதன் பின்பு நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்துவது குறித்து அரசு முடிவு எடுக்கும்.

செந்தில் பாலாஜி விவகாரத்தில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றது குறித்து அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்கிற போது நீதிமன்றத்திற்கு சென்று அவரது ரத்த சம்பந்தமான உறவினர்கள், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என கேட்கிறபோது, அதற்கான உத்தரவை தருகின்ற உரிமை நீதிமன்றத்திற்கு தான் உண்டு. செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதால் தான் இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. நாங்களாக எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story