திராட்சை சாகுபடி செய்து அசத்தும் என்ஜினீயரிங் பட்டதாரி
வள்ளியூர் அருகே வெப்பம் மிகுந்த பகுதியில் திராட்சை சாகுபடி செய்து என்ஜினீயரிங் பட்டதாரி அசத்தி வருகிறார்.
வள்ளியூர்:
வள்ளியூர் அருகே வெப்பம் மிகுந்த பகுதியில் திராட்சை சாகுபடி செய்து என்ஜினீயரிங் பட்டதாரி அசத்தி வருகிறார்.
என்ஜினீயரிங் பட்டதாரி
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள காணிமடம் பகுதியை சேர்ந்தவர் செலின் (வயது 41). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் வெளிநாட்டில் உள்ள கப்பல் நிறுவனத்தில் எலக்ட்ரோ டெக்னீஷியனாக வேலை பார்த்து வந்தார்.
செலினுடன் வேலை பார்த்து வந்த ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த மாலுமி ஒருவர் தங்கள் நாட்டில் வெப்பம் அதிகமாக உள்ள பகுதிகளில் பயிரிடப்படும் திராட்சைகள் மிகவும் சுவையாகவும், சத்து நிறைந்ததாகவும் இருப்பதாக தெரிவித்தார். இதனால் திராட்சை பயிரிட ஆர்வம் கொண்ட செலின் தனது ேவலையை துறந்து சொந்த ஊருக்கு திரும்பினார்.
திராட்சை சாகுபடி
இதையடுத்து செலின் நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள தனக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் திராட்சை சாகுபடி செய்ய திட்டமிட்டு அதற்கான பணிகளை தொடங்கினார்.
இதற்காக செலின் திராட்சை அதிகளவு பயிரிடப்பட்டு வரும் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பல்வேறு இடங்களுக்கு சென்று அங்குள்ள விவசாயிகளிடம் தங்கி பயிற்சி பெற்று பல்வேறு தொழில்நுட்பங்களை கற்றார்.
அதன் பின்பு கடந்த 2019-ம் ஆண்டு தனது விவசாய நிலத்தில் 2 ஏக்கர் பரப்பில் திராட்சை சாகுபடி செய்ய தொடங்கினார். அவர் பன்னீர் வகை திராட்சையை தேர்ந்தெடுத்தார்.
ஆண்டுக்கு 60 டன்
வெப்பம் மிகுந்த பகுதியில் பன்னீர் திராட்சையை வளர்ப்பதற்காக "ரூட் ஸ்டாக்" என்ற கொடியுடன் இணைத்து வளர்த்து பின்பு பெரிதானவுடன் அந்த கொடியை வெட்டி விட்டு திராட்சை செடியை பந்தலிட்டு அதன்மீது படர விட்டு வளர்த்து வருகிறார். அதன் பலனாக தற்போது 2 ஏக்கர் நிலத்தில் ஆண்டுக்கு 60 டன் திராட்சை பழம் கிடைப்பதன் மூலம் நல்ல மகசூலை செலின் பெற்று வருகிறார்.
இங்கு பறிக்கப்படும் திராட்சை பழங்களை வள்ளியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தோட்டத்திற்கே நேரிடையாக வந்து ஆர்வத்துடன் விலைக்கு வாங்கி செல்கின்றனர்.
மகிழ்ச்சி அளிக்கிறது
இதுகுறித்து செலின் கூறுகையில், "விவசாய நிலத்தில் திராட்சை சாகுபடி செய்ய திட்டமிட்டு திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள திராட்சை தோட்டங்களுக்கு சென்று பார்வையிட்டேன். பின்பு அங்குள்ள ஆனைமலையான்பட்டி திராட்சை ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி பெற்று தொழில்நுட்பங்களை கற்றறிந்தேன். அதன் பயனாக 2 ஏக்கரில் சாகுபடி செய்து தற்போது அதற்குரிய மகசூலை பெற்று வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. பொதுமக்களும் ஆர்வத்துடன் திராட்சை பழங்களை வாங்கிச் செல்கிறார்கள்" என்றார்.
கலெக்டர் பாராட்டு
இதுவரை நெல்லை மாவட்டத்தில் யாருமே திராட்சை சாகுபடி செய்யாத நிலையில் செலின் திராட்சை சாகுபடி செய்து மற்ற விவசாயிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார். இதற்காக நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, செலினை பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளார்.