பட்டம் பெற்ற திறமையான மாணவர்கள் வெளிநாட்டு வேலைக்கு செல்லக்கூடாது
பட்டம் பெற்ற திறமையான மாணவர்கள் வெளிநாட்டு வேலைக்கு செல்லக்கூடாது என சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஸ்ரீமதி கூறினார்.
சிவகாசி,
பட்டம் பெற்ற திறமையான மாணவர்கள் வெளிநாட்டு வேலைக்கு செல்லக்கூடாது என சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஸ்ரீமதி கூறினார்.
பட்டமளிப்பு விழா
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் 18-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் செயலர் ஏ.பி.செல்வராஜன் தலைமை தாங்கினார். முதல்வர் பாலமுருகன் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஸ்ரீமதி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் பலர் அறக்கட்டளைகள் தொடங்கி கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள். இவைகள் அனைத்து சேவை மனப்பான்மையில் நடந்து வருவது மகிழ்ச்சியை அளிக்கிறது.
பட்டம் பெற்ற நீங்கள் அடுத்து என்ன செய்ய போகிறீர்கள்? சிவகாசியில் ஏற்கனவே தொழில்முனைவோர்கள் அதிக அளவில் உள்ளனர். இருந்தாலும் நீங்களும் தொழில் முனைவோராக மாறி சிவகாசியின் பெயரை உலக அளவில் உச்சரிக்க நீங்கள் உதவியாக இருக்க வேண்டும்.
இந்தியாவில் உள்ள பணிகளை செய்ய அதிகமானவர்கள் தேவைப்படும் நிலையில் பட்டம் பெற்ற திறமையான மாணவர்கள் வெளிநாடுகளுக்கு வேலை தேடி செல்வதை தவிர்க்க வேண்டும்.
நிரந்தர தீர்வு
தமிழகத்தில் போதிய ஆட்கள் இல்லாத நிலையில் தான் வடமாநிலங்களில் இருந்து தினமும் பல ஆயிரம் பேர் தமிழகத்துக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். மாணவர்கள் நீர்நிலைகளை உருவாக்கி, பாதுகாக்க வேண்டும். பட்டாசு ஆலைகளில் விபத்து இல்லாமல் பட்டாசு உற்பத்தி செய்ய தேவையான வழிமுறைகளையும், நிரந்தர தீர்வுகளையும் மாணவர்கள் கண்டுபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் 1057 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை சிறப்பு விருந்தினர் நீதிபதி ஸ்ரீமதி வழங்கினார். விழாவில் காளீஸ்வரி கல்லூரியின் முன்னாள் முதல்வர் கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீ காளீஸ்வரி மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் வளர்மதி, மாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை துணை முதல்வர் முத்துலட்சுமி செய்திருந்தார்.