அரசு மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
மயிலாடுதுறை அரசு மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் அறவாழி தலைமை தாங்கினார். இதில் தஞ்சை மண்டல கல்லூரி கல்வித்துறை இணை இயக்குனர் எழிலன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், கல்லூரியில் பட்டம் பெற்றுள்ள மாணவிகள் தொடர்ந்து மேல்படிப்பு படிக்க வேண்டும், போட்டித் தேர்வுகளில் கலந்துகொண்டு நல்ல அரசு துறை அதிகாரியாக வர வேண்டும். காலமாற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சியின் காரணமாக தற்போது பெண்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர். பெண்கள் ஆண்களுக்கு நிகராக பலதுறைகளில் முன்னணி வகிக்கிறார்கள். பெண்களின் வளர்ச்சிக்கு தமிழகமே முன்னுதாரணமாகத் திகழ்கிறது. 54 சதவீதம் பேர் உயர்கல்வி படித்து உள்ளனர் என்றார். தொடர்ந்து கல்லூரியில் இளங்கலை, முதுகலை படித்து முடித்த 803 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் கல்லூரி பேராசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.