பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா: 605 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் -கவர்னர் வழங்கினார்


பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா: 605 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் -கவர்னர் வழங்கினார்
x

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் 605 மாணவ, மாணவிகளுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கினார்.

சேலம்,

சேலம் கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் 21-வது பட்டமளிப்பு விழா நேற்று மதியம் நடந்தது. பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் வரவேற்று பல்கலைக்கழக சிறப்புகள் மற்றும் சாதனைகள் குறித்து பேசினார். சிறப்பு அழைப்பாளராக சென்னை இந்திய தொழில்நுட்ப கழகத்தின் முன்னாள் இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி கலந்து கொண்டார்.

விழாவில், பெரியார் பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு கவர்னருமான ஆர்.என்.ரவி கலந்து கொண்டு 2021-2022-ம் கல்வியாண்டில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

605 பேருக்கு பட்டம்

விழாவில், 4 பேருக்கு முதுமுனைவர் பட்டமும், முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்துள்ள 502 பேருக்கும், பெரியார் பல்கலைக்கழக துறைகள் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் முதுகலை மற்றும் இளங்கலை பாடங்களில் முதலிடம் பிடித்த 99 மாணவ, மாணவிகளுக்கு தங்கப்பதக்கத்துடன் பட்டய சான்றிதழ்களை கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கினார். விழாவில் மொத்தம் 605 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

விழாவில், பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல், தேர்வாணையர் கதிரவன் உள்பட பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் பங்கேற்கவில்லை

இதனிடையே, பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அவரது பெயரும் அழைப்பிதழில் இடம் பெற்றிருந்தது. ஆனால் சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் பொன்முடி கலந்து கொண்டதால் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு

பட்டமளிப்பு விழாவில் பா.ம.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அருள் (சேலம் மேற்கு), சதாசிவம் (மேட்டூர்) ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் இருவரும் அரங்கத்திற்குள் முதல் வரிசையில் அமர வைக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் துணைவேந்தர் ஜெகநாதன் பேசிக்கொண்டிருந்தபோது உரிய மரியாதை அளிக்கவில்லை எனக்கூறி எம்.எல்.ஏ.க்கள் இருவரும் திடீரென எழுந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து சதாசிவம் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், தொகுதி பிரச்சினை குறித்து கவர்னரை சந்திக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டோம். அதற்கு விழா முடியும் வரை காத்திருந்து மதியம் 2.30 மணிக்கு கவர்னரை சந்திக்கலாம் என்று கூறினர். அதுவரைக்கும் எங்களால் காத்திருக்க முடியாது. அதோடு, விழாவில் உரிய இருக்கை ஒதுக்கப்படவில்லை. பட்டமளிப்பு விழாவிற்கு, பல்கலைக்கழகம் அமைந்துள்ள சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வான அருளுக்கு முறையான அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்தோம், என்றார்.


Next Story