சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா: 605 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் - கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கினார்


தினத்தந்தி 29 Jun 2023 3:02 AM IST (Updated: 29 Jun 2023 4:53 PM IST)
t-max-icont-min-icon

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் 605 மாணவ, மாணவிகளுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கினார்.

சேலம்

கருப்பூர்:

பட்டமளிப்பு விழா

சேலம் கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் 21-வது பட்டமளிப்பு விழா நேற்று மதியம் நடந்தது. பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் வரவேற்று பல்கலைக்கழக சிறப்புகள் மற்றும் சாதனைகள் குறித்து பேசினார். விழாவில், பெரியார் பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு கவர்னருமான ஆர்.என்.ரவி கலந்து கொண்டு 2021-2022-ம் கல்வியாண்டில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

விழாவில், 4 பேருக்கு முதுமுனைவர் பட்டமும், முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்துள்ள 502 பேருக்கும், பெரியார் பல்கலைக்கழக துறைகள் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் முதுகலை மற்றும் இளங்கலை பாடங்களில் முதலிடம் பிடித்த 99 மாணவ, மாணவிகளுக்கு தங்கப்பதக்கத்துடன் பட்டய சான்றிதழ்களை கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கினார். நேற்று நடந்த விழாவில் 605 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக, சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சென்னை இந்திய தொழில்நுட்ப கழகத்தின் முன்னாள் இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி பேசியதாவது;-

இந்தியாவின் உயர்கல்வி அமைப்பு சுதந்திரத்திற்கு பிறகு மிக வேகமாக வளர்ந்துள்ளது. குறிப்பாக பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 50 மடங்குக்கு மேல் வளர்ந்துள்ளது. அதே நேரத்தில் அவற்றில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 150 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சியில் தமிழகம் முன்னணியில் உள்ளது. மாநிலத்திற்கும், நாட்டிற்கும் இந்த விஷயத்தில் பெரியார் பல்கலைக்கழகம் முக்கிய பங்காற்றுகிறது.

தனிநபர் வருமானம்

நமது நாடு மிகச்சிறந்த பொருளாதாரத்தில் ஐந்தாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்தை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. நாட்டின் பொருளாதாரம் தனிநபர் வருமானத்தை அடிப்படையாக கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. அதனுடன் தனி குடும்பங்களின் வருமானத்தையும் சேர்த்து கொள்ள வேண்டும்.

வெளிநாடுகளில் முதியோர்களின் மருத்துவ செலவுக்காக 80 சதவீதம் தொகையை செலவழிக்கின்றனர். ஆனால் இந்தியாவில் குடும்பம் சார்ந்து வாழ்வதால் அந்த மருத்துவ செலவு பெரிய அளவில் இருப்பதில்லை. நம்மிடம் சிக்கன முறை அதிகமாக உள்ளது. எனவே, குடும்ப முறையையும், சிக்கன முறையையும் தொடர்ந்து கடைபிடித்தால் தனிநபர் வருமானம் இரட்டிப்பாகும். நாம் எதை பின்பற்ற போகிறோம் என்பதை தீர்மானிக்க வேண்டும்.

சாதிக்க வேண்டும்

மாணவர்கள் பட்டங்கள் மற்றும் பரிசுகளுடன் திருப்தி அடைந்து விடாமல் கல்விக்கூடம், பணியிடங்கள் மற்றும் பொது இடங்கள் என இடைவிடாமல் தங்களது படிப்பை தொடர வேண்டும். இன்று பட்டங்கள், விருதுகள் மற்றும் பதவிகளை பெற்று கொண்டிருக்கும் மாணவர்களும், அறிஞர்களும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான இந்தியாவின் முதலீட்டு மூலதனம் ஆவார்கள். உங்களது திறமைகள் மற்றும் பெற்ற அறிவின் மூலம் நீங்கள் தேர்ந்்தெடுத்த துறைகளில் சாதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல், தேர்வாணையர் கதிரவன், பத்மவாணி கல்வி நிறுவனங்களின் தாளாளர் சத்தியமூர்த்தி, பத்மவாணி மகளிர் கல்லூரி முதல்வர் அரிகிருஷ்ணராஜ் உள்பட பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

61,414 பேருக்கு பட்டங்கள்

மேலும், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் இணைவு பெற்ற கல்லூரிகளை சேர்ந்த 53 ஆயிரத்து 744 மாணவர்களுக்கும், பல்கலைக்கழக துறைகளில் பயின்ற 1,126 பேருக்கும், பெரியார் பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி நிறுவனத்தில் படித்த 6,514 பேருக்கும் என மொத்தம் 61 ஆயிரத்து 414 மாணவ- மாணவிகளுக்கு அந்தந்த கல்லூரிகள் மூலம் பட்டங்கள் வழங்கப்பட உள்ளது.

அமைச்சர் பங்கேற்கவில்லை

இதனிடையே, பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அவரது பெயரும் அழைப்பிதழில் இடம் பெற்றிருந்தது. ஆனால் சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் பொன்முடி கலந்து கொண்டதால் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.


Next Story