201 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்
அரியலூர் மாவட்டத்தில் 201 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
சுதந்திர தினத்தையொட்டி அரியலூர் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளிலும் நேற்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றது. அதன்படி வாலாஜாநகரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா கலந்துகொண்டார். கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது விதி செலவினங்கள், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் வினியோகத்தை உறுதி செய்தல், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல், அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துதல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம் உள்ளிட்ட பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதேபோன்று மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மேரி மாதி, மேரா தேஷ் நிகழ்ச்சிக்கான மரக்கன்றுகளை நடுதல், கிராம ஊராட்சி சேவை மையம் அல்லது கிராம ஊராட்சி மன்ற அலுவலகங்களில் நிறுவப்பட்டுள்ள டான்ஃபினெட்-ன் இணையதள உபகரணங்களை பாதுகாத்தல், தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம், பள்ளி மேலாண்மைக்குழு உள்ளிட்ட இதர பொருட்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் குடிநீர் வசதி, புதிய ரேஷன் கடை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்கள் கோரிக்கையினை உடனடியாக நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.