அய்யன்பேட்டை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் - கலெக்டர் பங்கேற்பு


அய்யன்பேட்டை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் - கலெக்டர் பங்கேற்பு
x

அய்யன்பேட்டை ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் கலைச்செல்வி மோகன் பங்கேற்றார்.

காஞ்சிபுரம்

வாலாஜாபாத்,

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் அய்யன்பேட்டை கிராம ஊராட்சியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் ஆரம்ப பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் கலந்து கொண்டு கிராம சபை கூட்டத்தை பார்வையிட்டு கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட கிராம மக்கள், ஆரம்ப பள்ளியின் சுற்றுச்சுவர் உயரம் உயர்த்தி கட்ட வேண்டும், பாலாற்று குடிநீருக்காக தனி பைப் லைன் அமைத்து தனி குழாய்கள் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் சேதம் அடைந்து காணப்படும் மழைநீர் கால்வாய்களை சீரமைத்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கிராம மக்கள் மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து கிராம மக்களிடம் பேசிய மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், கிராமப்புற வளர்ச்சியின் முக்கிய ஆதாரமாக விளங்குவது வரி வருவாய் இதனை கிராம மக்கள் முழுமையாக ஊராட்சி நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தினால் மட்டுமே ஊராட்சியின் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும் என்றும், கிராமசபை கூட்டத்திற்கு கிராம மக்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் வந்துள்ளது பெரும் மகிழ்ச்சியை அளிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் கிராம மக்களின் குறைகள் குறித்து உரிய முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.

பின்னர் இதனை தொடர்ந்து ஊராட்சியில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து புதிய சீருடைகளை வழங்கி கவுரவித்தார்.

கிராம சபை கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குனர் செல்வகுமார், ஒன்றிய குழு தலைவர், துணைத்தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர் மற்றும் அனைத்து துறைகளை சேர்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story