அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில்களில் மயானக்கொள்ளை


அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில்களில் மயானக்கொள்ளை
x
தினத்தந்தி 20 Feb 2023 6:45 PM GMT (Updated: 20 Feb 2023 6:46 PM GMT)

விருத்தாசலம், ஸ்ரீமுஷ்ணம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில்களில் மயானக்கொள்ளை விழா நடைபெற்றது.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் சந்தைதோப்பு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று வந்தது. மேலும் சாமி வீதிஉலாவும் நடைபெற்றது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான மயானக்கொள்ளை விழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அம்மன் கோட்டைக்கு சென்று நிசாசனி வயிற்றை கிழித்து குடலை பிடுங்கி மாலையாக அணிந்து, குழந்தையை ஏந்தி வரும் ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் ஊர்வலமாக சென்று காந்திநகர் மணிமுக்தாற்றில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அப்போது பக்தர்கள் பலர் அம்மன் வேடம் அணிந்து ஆடியதோடு, அங்கிருந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர். அதனை தொடர்ந்து அங்கு மயானக்கொள்ளை சூறையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 23-ந்தேதி செடல் உற்சமும், 24-ந்தேதி திருவிளக்கு பூஜையும் கோவிலில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

ஸ்ரீமுஷ்ணம்

இதேபோல் ஸ்ரீமுஷ்ணம் ஆறுமுக செட்டிக்குளம் சந்தை தோப்பு அருகே உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மயானக்கொள்ளை விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் மற்றும் பெரியாண்டவர் உற்சவர் ஊர்வலமாக சென்று அதே பகுதியில் உள்ள சுடுகாட்டில் எழுந்தருளினர். இதில் மயான கொட்டகையில் சுடுகாட்டு சாம்பலால் அமைக்கப்பட்ட மயான காளிக்கு படையலிட்டு மயானக்கொள்ளை உற்சவம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் பலர் அம்மன் வேடம் அணிந்து ஆடினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 23-ந் தேதி தீமிதி திருவிழாவும், 24-ந் தேதி தாண்டவராயசுவாமி, அங்காளபரமேஸ்வரி திருக்கல்யாணம்மற்றும் தேரோட்டம் நடைபெற இருக்கிறது.


Next Story