மயான கொள்ளை நிகழ்ச்சி
ராசிபுரம் அருகே உள்ள ஆர்.புதுப்பாளையம் கிராமத்தில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது.
ராசிபுரம்
ராசிபுரம் அருகே உள்ள ஆர்.புதுப்பாளையம் கிராமத்தில் பழமையான நாகம்மாயம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகா சிவராத்திரி மற்றும் மயான கொள்ளை நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடந்து வருவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் நடந்தது. நேற்று அதிகாலை அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. இதை தொடர்ந்து முகம் எடுத்து ஆடும் நிகழ்ச்சி நடந்தது. முகம் எடுத்தல் நிகழ்வு என்பது மூங்கில்களை வைத்து படலாக கட்டி அரிசி மாவில் 5 வித்தியாசமான முகம் போன்று உருவங்களை செய்து அதற்கு 5 நிற வண்ணங்கள் பூசி சுற்றிலும் மா, இலை மற்றும் தீ பந்தம் வைத்து 15 கிலோ எடை கொண்ட உருவத்தை தூக்கி ஆடிக்கொண்டு கோவிலில் இருந்து மயானம் வரை செல்வார்கள். பின்னர் மயானத்தில் காவு சோறு கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இவ்வாறு கொடுக்கப்படும் இல் காவு சோற்றை உட்கொண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. நேற்று மாலை வல்லவராயன் வேடமிட்டு மயான கொள்ளைக்கு சென்று ஆடு கடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நேற்று மாலை 6.30 மணி அளவில் ஆட்டின் குடலை உருவி மாலையாக அணிந்து கொண்டு ஈஸ்வரி வேடமிட்டு ஊர் பவனி நடந்தது. இதில் புதுப்பாளையம் மட்டுமல்லாமல் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் கலந்து கொண்டனர்.