கள்ளக்குறிச்சியில் 2 பேருக்கு பசுமை சாதனையாளர் விருது- கலெக்டர் ஷ்ரவன் குமார் வழங்கினார்
கள்ளக்குறிச்சியில் 2 பேருக்கு பசுமை சாதனையாளர் விருதை கலெக்டர் ஷ்ரவன் குமார் வழங்கினார்.
தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி இப்பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் தனி நபர்கள் அல்லது அமைப்புகளுக்கு ஆண்டு தோறும் பசுமை சாம்பியன் விருதும், 100 பேருக்கு தலா ரூபாய் ஒரு லட்சம் வீதம் பணம் முடிப்பு வழங்கிட தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக மரக்கன்றுகள் நடுதல், இயற்கை வளங்களை பாதுகாத்திடுதல், பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்றுப் பொருட்கள் பயன்படுத்துவது, பல்வேறு தூய்மை பணிகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டதற்காக பசுமை சாதனையாளர் விருதிற்கு 6 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களது ஆவணங்கள் சரிபார்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் குறித்து மாவட்ட அளவிலான தேர்வுக்குழு மூலம் நேர்முக தேர்வு நடத்தப்பட்டது. இதில் கள்ளக்குறிச்சி கீர்த்தி மற்றும் பொன்னியாந்தல் கிராமத்தை சேர்ந்த வீரப்பன் ஆகியோர் பசுமை சாதனையாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கீர்த்தி, வீரப்பன் ஆகியோருக்கு தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் சார்பில் பசுமை சாதனையாளர் விருது மற்றும் தலா ரூ. 1 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வழங்கினார்.
அப்போது, உதவி பொறியாளர்கள் இளையராஜா, ராம்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.