சாலை ஓரங்களில் மரங்களை வெட்டி அகற்றுவது குறித்து பசுமை குழு கூட்டம்


சாலை ஓரங்களில் மரங்களை வெட்டி அகற்றுவது குறித்து பசுமை குழு கூட்டம்
x

ஆற்காடு-திண்டிவனம் 4 வழிச்சாலை விரிவாக்க பணிக்கு சாலை ஓரங்களில் மரங்களை வெட்டி அகற்றுவது குறித்த கூட்டம் கலெக்டர் வளர்மதி தலைமையில் நடந்தது.

ராணிப்பேட்டை

பசுமை குழு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட பசுமை குழு கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். கூட்டத்தில், ஆற்காடு நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்தின் சார்பாக ஆற்காடு - திண்டிவனம் சாலை 4 வழிச்சாலையாக அகலப்படுத்தும் திட்டத்தில் முப்பதுவெட்டி, மாங்காடு, புதுப்பாடி, குக்குண்டி, சக்கரமல்லூர், கடப்பந்தாங்கல், கீராம்பாடி, கரிக்கந்தாங்கல், முள்ளுவாடி, மேச்சேரி ஆகிய ஊராட்சிகளில் சாலை ஓரங்களில் உள்ள பச்சை மரங்களை வெட்டி அகற்றிட பசுமை குழுவின் அனுமதி கோரி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதற்கு மாற்றாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் மரங்களை நடவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதேபோல தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் அமைக்கப்பட உள்ள உயர்மின் கோபுரம் அமைப்பதற்கான பணிகளில் மரம் அகற்றப்படுவது குறித்தும், வாலாஜாவில் நெடுஞ்சாலை துறையின் மூலம் மரங்கள் அகற்றப்படுவது குறித்தும், திண்டிவனம் - நகரி புதிய அகல ெரயில் பாதை அமைக்கும் பணிக்கு சோளிங்கர் வட்டம் கொடைக்கல் கிராமத்தில் பட்டா நிலங்களுக்கு நில மதிப்பீடு செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

6½ லட்சம் மரக்கன்றுகள்

வனத்துறையின் மூலம் பசுமை நிலப்பரப்பு அதிகரிக்கும் திட்டத்தில் சுமார் 6½ லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதேபோல மற்ற துறைகளும் தங்கள் துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மரக்கன்று நடவு பணிகளை துரிதப்படுத்தி நடவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

ராணிப்பேட்டையில் சிப்காட் பகுதியில் இயங்கி வரும் அனைத்து தொழிற்சாலைகளும் தங்களின் காலியிடங்களில் செடிகள் நடுவதற்கு மண் பரிசோதனை செய்து கட்டாயம் ஒவ்வொரு தனியார் கம்பெனியும் மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் கட்டாயம் மரக்கன்றுகளை நட்டு சுற்றுச் சூழல் மாசு ஏற்படுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இணைந்து செயல்பட ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

ஒவ்வொரு வருடமும் நடவு செய்த மரக்கன்றுகள் நிலை குறித்து அறிக்கை பெறப்பட்டு மரக்கன்றுகள் வளர்கின்ற நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும். ஆகவே மாவட்ட தொழில் மைய மேலாளர் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தொழிலக பாதுகாப்பு அலுவலர்கள் ஆகியோர் இணைந்து இத்திட்டத்தினை செயல்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது

கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் கலாநிதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story