பச்சை துண்டு ஊர்வலம்-மாநாடு


பச்சை துண்டு ஊர்வலம்-மாநாடு
x

உழவர் தினத்தையொட்டி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் திருச்சியில் நேற்று பச்சை துண்டு பேரணி, மாநாடு நடைபெற்றது.

திருச்சி

உழவர் தினத்தையொட்டி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் திருச்சியில் நேற்று பச்சை துண்டு பேரணி, மாநாடு நடைபெற்றது.

பச்சை துண்டு பேரணி

உழவர் தினத்தையொட்டி தமிழக விவசாயிகள் சங்கம் (கட்சி சார்பற்றது) சார்பில் திருச்சியில் நேற்று பச்சை துண்டு பேரணி, மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று மாலை திருச்சி கரூர் பை-பாஸ் சாலையில் இருந்து சாஸ்திரி சாலை வழியாக உழவர் சந்தை பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த மாநாட்டு திடலுக்கு விவசாயிகள் பச்சை துண்டு அணிந்து பேரணியாக வந்தனர்.

இதைத்தொடர்ந்து அங்கு நடந்த மாநாட்டுக்கு மாநில தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். திருச்சி மாவட்ட தலைவர் சின்னதுரை வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் சுந்தரம், பொருளாளர் பாண்டியன், துணை பொதுச்செயலாளர் ராஜா சிதம்பரம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும்

இலவச மின்சாரத்தை தொடர்ந்து வழங்க வேண்டும். விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும், உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயிக்க வழங்க வேண்டும். நீர்வழி-வள சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். காவிரி டெல்டா விவசாயத்தை அழிக்கும் வகையில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட நடவடிக்கை எடுக்கும் கர்நாடக அரசின் முடிவை வன்மையாக கண்டிப்பது. கரூர் திருச்சி-தஞ்சை-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை அமைக்க 13 ஏரிகளின் குறுக்கே மண் கொட்டி அமைப்பதை கைவிட்டு மேம்பாலங்கள் அமைத்து நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும்.

திருச்சி புறநகரில் உள்ள அனைத்து ஆறுகளையும் புனரமைக்க வேண்டும். அரசு நேரடி கொள்முதல் நிலையத்துக்கு விவசாயிகள் கொண்டுவரும் நெல்லை தொடர்ந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, புள்ளம்பாடி வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீர் கேட்டு கடந்த 9-8-1988-ம் ஆண்டு போராடியபோது, காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் பலியான விவசாயிகள் பி.நாகராஜ்-ஜெரோமியா நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.


Next Story