பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.14 விலை நிர்ணயம்
குன்னூரில் கடந்த மே மாதத்துக்கு பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.14 விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த விலை கட்டுபடியாகாததால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.
குன்னூர்,
குன்னூரில் கடந்த மே மாதத்துக்கு பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.14 விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த விலை கட்டுபடியாகாததால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.
பச்சை தேயிலை
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தங்களது தோட்டத்தில் பறிக்கும் பச்சை தேயிலையை, தேயிலை தொழிற்சாலைகளுக்கு வழங்கி வருகின்றனர். இந்த தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத்தூள் வாரந்தோறும் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் தேயிலை ஏலத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
2 நாள் ஏலத்தில் தேயிலைத்தூள் விற்பனை சராசரி விலையை கணக்கில் கொண்டு, பச்சை தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. குறிப்பாக கோத்தகிரியில் அந்தந்த வார ஏல விற்பனை விலையை கருத்தில் கொண்டு வார விலையும், குன்னூரில் 4 வார ஏல விலையை அடிப்படையாக கொண்டு மாத விலையும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.
ரூ.14 விலை நிர்ணயம்
தற்போது தேயிலை ஏலத்தில் தேயிலைத்தூள் விலை குறைந்து வருகிறது. அதன் எதிரொலியாக பச்சை தேயிலை விலையும் குறைந்துகொண்டே செல்கிறது. கடந்த மே மாதத்துக்கு பச்சை தேயிலை கிலோ ஒன்றுக்கு ரூ.14 விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. நாளுக்கு நாள் விலை குறைவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.14 நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இது கட்டுபடியாகாத விலை ஆகும். தேயிலை பறிக்க தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்த வேண்டி உள்ளது. அவர்களுக்கு வலி அதிகமாக இருக்கிறது. உர விலை பல மடங்கு அதிகரித்து உள்ளது. தற்போது மழை பெய்தாலும், உர விலை உயர்வால், உரமிட விவசாயிகள் தயங்குகின்றனர். மேலும் தோட்ட பராமரிப்பு செலவு அதிகரித்து உள்ளது. எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு பச்சை தேயிலைக்கு கட்டுபடியான விலையை நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.