நீலகிரியில் பச்சை தேயிலை விலை ரூ.12 ஆக குறைந்தது-விவசாயிகள் கவலை
நீலகிரியில், பச்சை தேயிலை விலை கிலோவுக்கு ரூ.12 ஆக குறைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கூடலூர்: நீலகிரியில், பச்சை தேயிலை விலை கிலோவுக்கு ரூ.12 ஆக குறைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பச்சை தேயிலை விளைச்சல்
நீலகிரி மாவட்டத்தின் பிரதான விவசாயமாக தேயிலை திகழ்கிறது. இதனால் நீலகிரி மாவட்ட பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் தேயிலை விவசாயம் முக்கிய இடத்தை பிடிக்கிறது. தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகம் மூலம் 4 ஆயிரத்து 311 ஹெக்டர் பரப்பளவில் தேயிலையை பயிரிட்டுள்ளது. இதுதவிர கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரிலும், குன்னூர், கோத்தகிரி, குந்தா தாலுகாக்களில் 45 ஆயிரம் ஏக்கரிலும் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது.
இதேபோல் கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகா பகுதிகளில் சட்டப்பிரிவு-17 மற்றும் வருவாய் நிலங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தேயிலை பயிரிட்டுள்ளனர். அதன்படி மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளதாக சிறு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். தினமும் தோட்டங்களில் விளையும் பச்சை தேயிலையை விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர். தொடர்ந்து 180 தனியார் தேயிலை தொழிற்சாலைகள் மற்றும் 15 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் கொள்முதல் செய்யப்படுகிறது. பின்னர் தேயிலை தூள் உற்பத்தி செய்யப்படுகிறது.
ரூ.12 ஆக குறைந்தது
இதற்கிடையே பச்சை தேயிலைக்கு மாதந்தோறும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி நடப்பு மாதத்தில் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.12 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் மாதந்தோறும் விலை குறைந்து வருவதால் பராமரிப்பு மற்றும் அறுவடை உள்ளிட்ட செலவினங்களை ஈடுசெய்ய முடியாத வகையில் உள்ளது என புலம்பி வருகின்றனர்.
கூடலூர் சாலீஸ்வரி கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் விவசாயிகள் வழங்கக்கூடிய பச்சை தேயிலைக்கு கடந்த மாதத்தை விட ரூ.2 விலை குறைந்துள்ளது. இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் பச்சை தேயிலைக்கு ரூ.12 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, 'கடந்த மாதம் கிலோ ரூ.14ஆக இருந்தது. தற்போது மீண்டும் விலை குறைக்கப்பட்டுள்ளது. எனவே, பச்சை தேயிலைக்கு நிரந்தரமாக விலை நிர்ணயம் செய்ய வேண்டும். மாதந்தோறும் இறங்கு முகத்தில் விலை உள்ளதால் தேயிலை விவசாயம் தொடர்ந்து நலிவடையும். அதனால் அதிகாரிகள் தேயிலை விவசாயத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.