ஈரோட்டில் உள்ள பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முறையாக பராமரிக்க வேண்டும்- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு
ஈரோட்டில் உள்ள பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
ஈரோடு
ஈரோட்டில் உள்ள பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
பஸ் வசதி
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்துக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பெருந்துறை அருகே உள்ள பெத்தாம்பாளையம், சூரியம்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்திருந்த மனுவில், 'எங்கள் ஊரில் கீழ்பவானி வாய்க்காலில் போக்குவரத்துக்காக 6 மீட்டர் அகலத்தில் மேம்பாலம் அமைக்கும் பணியை விரைந்து தொடங்க வேண்டும்' என்று கூறியிருந்தனர்.
தாளவாடி அருகே உள்ள கேர்மாளம், திங்களூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்திருந்த மனுவில், 'மாணவ -மாணவிகளின் நலன் கருதி கோட்டமாளம் மேல்நிலை பள்ளிக்கூடத்துக்கு போதிய பஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்' என்று கூறி இருந்தனர்.
மறு சுழற்சி
தமிழ்நாடு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தினர் கொடுத்திருந்த மனுவில், 'ஈரோட்டில் பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இதனை மாநகராட்சி நிர்வாகம் முறையாக சீரமைத்து, சாயக்கழிவு நீரையும், இதர கழிவு நீரையும் சுத்திகரித்து அதை மறு சுழற்சி செய்ய வேண்டும்' என்று கூறி இருந்தனர்.
மரம் தீ வைத்து எரிப்பு
அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் கொடுக்கப்பட்டு இருந்த மனுவில், 'மொடக்குறிச்சி எல்லக்கடையில் இருந்து வடுகபட்டி செல்லும் ரோட்டில் உள்ள ஏணிப்பாளி பகுதியில் ரோட்டின் இருபுறமும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான புளிய மரங்கள் உள்ளன. இதில் 15 மரங்களுக்கு தீ வைத்து எரித்து, பட்டுபோகும் நிலையை ஏற்படுத்தி உள்ளனர். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி இருந்தனர்.
அந்தியூர் அருகே உள்ள சென்னம்பட்டி பகுதியை சேர்ந்த மாதேஸ் என்பவர் கொடுத்திருந்த மனுவில், 'எனது இளைய மகள், சென்னம்பட்டியில் உள்ள அரசு தொடக்க பள்ளிக்கூடத்தில் தற்போது 1-ம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கு "சாதி-மதம் அற்றோர்" என சான்றிதழ் வழங்க வேண்டும்' என்று கூறி இருந்தார்.
287 மனுக்கள்
தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள், பார் கட்டிட உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர் நலச்சங்கத்தினர் கலெக்டரிடம் கொடுத்திருந்த மனுவில், 'டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பதால், வாடிக்கையாளர் பாருக்குள் வர தயங்குகின்றனர். இதனால் எங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி இருந்தனர்.
இதேபோல் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து மனு வழங்கினர். மொத்தம் 287 மனுக்கள் பெறப்பட்டன. மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதை அதிகாரிகளிடம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் குமரன், உதவி ஆணையாளர் ஜெயராணி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.