இமயமலையில் இருந்து வந்த சாம்பல் வாலாட்டி குருவிகள்


இமயமலையில் இருந்து வந்த சாம்பல் வாலாட்டி குருவிகள்
x
தினத்தந்தி 17 Sept 2022 12:15 AM IST (Updated: 17 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறை வனச்சூழல் காரணமாக இமயமலையில் இருந்து சாம்பல் வாலாட்டி குருவிகள் வந்து உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை வனச்சூழல் காரணமாக இமயமலையில் இருந்து சாம்பல் வாலாட்டி குருவிகள் வந்து உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

பல்லுயிர் வாழும் தன்மை

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரகங்கள் மலைக் காடுகளை கொண்ட பிரதேசமாகும். இதில் வால்பாறை வனப்பகுதி பல்லுயிர் வாழும் தன்மை கொண்டது.

எனவே இங்கு புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, கரடி மற்றும் பறவைகள் உள்பட அரிய வகை உயிரினங்கள், தாவரங்கள் உள்ளன.

இருவாச்சி பறவை, சிங்கவால் குரங்குகள் போன்ற அழிந்து வரும் உயிரினங்கள் வாழ்வதற்கு உகந்த பகுதியாக வால்பாறை உள்ளது.

இதற்கு ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையினர் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் பங்களிப்பு முக்கியமானது.

சாம்பல் வாலாட்டி குருவிகள்

இந்த நிலையில் பல்வேறு இடங்களில் நிலவும் பருவ நிலை மாற்றம் காரணமாக பல்வேறு வனவிலங்குகள் மற்றும் பறவைகள் வால்பாறை வனப்பகுதிகளுக்கு வந்து செல்வதை காண முடிகிறது.

அந்த வகையில், இமயமலையில் நிலவும் கடுமையான பனிப் பொழிவு, குளிர், மழை காரணமாக ஆண்டுதோறும் ஆகஸ்டு மாத இறுதியில் தொடங்கி செப்டம்பர் மாதத்தில் சாம்பல் வாலாட்டி குருவிகள் வால்பாறைக்கு வருகின்றன.

அவை ஏப்ரல் மாதம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது வால்பாறை பகுதியில் சாம்பல் வாலாட்டி குருவிகள் அதிகம் தென்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

விழிப்புணர்வு

இமயமலையில் இருந்து வால்பாறை வனப் பகுதிக்கு சாம்பல் வாலாட்டி குருவிகள் வருவதற்கு வனச்சூழல் நன்றாக இருப்பதே காரணம் என்று வனத்துறையினர் கூறுகின்றனர்.

இந்த நிலைியல் சாம்பல் வாலாட்டி குருவிகள் குறித்து சிங்கோ னா அரசு உயர் நிலைப்பள்ளி மாணவ- மாணவிகளிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வார்டு கவுன்சிலர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் ராமமூர்த்தி வரவேற்றார். இதில், வால்பாறை வனச் சரகர் வெங்கடேஷ் கலந்து கொண்டு சாம்பல் வாலாட்டி பறவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

வாலாட்டி குருவிகள் குறித்து பறவைகள் ஆர்வலரும், ஆசிரியருமான செல்வகணேஷ் விளக்கி கூறினார்.


Next Story